இரண
1. தோற்றுவாய்
தமிழ் மொழியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வகைச்
சிறு காப்பியங்களுள் பரணி ஒன்று. இப் புறப்பொருள் நூல் வீரத்தைப் புகழ்வது; வீரனைத் தலைவனாகக்
கொண்டது; ஈரடித் தாழிசைகளால் ஆனது.
வானில் கோள்கள் இயங்கும் நடுக்கோட்டிற்கு
அருகில் இருபத்தி ஏழு மீன் இனக் கூட்டங்கள் உள. பூமியின் சார்புக்கோளாகிய திங்கள் ஒவ்வொரு
நாளும் ஒவ்வொரு மீன் கூட்டத்தைச் சார்ந்து இருப்பதாக நம் கண்களுக்குத் தோன்றுகிறது. அந்நாளை
அம் மீன்கூட்டத்தோடு இணைத்துக் கூறுவதுண்டு.
நாள்மீன் கூட்டங்களுக்கு அசுவினி முதல் இரேவதி
ஈறாக இருபத்தி ஏழு பெயர்கள் உண்டு. இவற்றுள் இரண்டாம் கூட்டம் பரணி: இக்கூட்டம் ஆய்த எழுத்துப்போல்
அமைந்த மூன்று மீன்களை உடையது. “பரணி பிறந்தான் தரணி ஆள்வான்”
என ஒரு பழமொழி உண்டு. பரணி நாள் கொடிய நிகழ்ச்சிகளுக்கு
உரியது என்ற நம்பிக்கையும் மக்களிடை நிலவுகிறது.
பெரும் போர் முடிந்ததும், பரணி நாளில் பேய்கள்
போர்க்களத்திலே கூழ் அட்டு, தேவிக்குப் படைத்து, தாமும் கூடி உண்டு, ஆடிப்பாடி வாழ்த்துவதைச்
சிறப்பு நிகழ்ச்சியாகக் கொண்டது பரணிக் காவியம்.
தமிழில் இன்று கிடைக்கும் பரணிநூல்கள் சிலவே.
அவற்றுள் காலத்தாலும், பெருமையாலும் முதன்மையானது சயங்கொண்டார் இயற்றிய கலிங்கத்துப்பரணி.
விசயதரன் என்னும் முதல் குலோத்துங்க சோழன்
(1070-1118) ஆற்றிய கலிங்கத்துப் போரைப் பாடும் நூல் இது. பாட்டுடைத் தலைவன் விசயதரனுடைய
சேனைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான். சோழ வம்சத்தைப் பாராட்டும் பகுதியில் ஒரு கூறும்,
கலிங்க நாட்டில் போர் நிகழ்ந்தது எனக் கூறும் பகுதியுமே வரலாற்றோடு இணைந்தன; ஏனைய பகுதிகள்
சயங்கொண்டாருடைய ஒப்பற்ற கற்பனைக் களஞ்சியத்திலிருந்து தோன்றியவை. சொல்நோக்கும்,
பொருள்நோக்கும் தொடைநோக்கும் கற்றோர்க்கு இன்பம் பயப்பன. “பரணிக்கோர் சயங்கொண்டான்”
எனப் பிற்காலத்தோர் புகழ ஏதுவானது.
|