இரணிய வதைப் பரணி

2

இதற

    இதற்கு முன், கொப்பம் என்னும் ஊரில் நிகழ்ந்த போரை ஒட்டி ஒரு பரணிநூல் எழுந்தது எனத் தெரிகிறது. விக்கிரம சோழன் இளமையில் வேறொரு கலிங்கப்போர் ஆற்றினான் எனவும், ஒட்டக்கூத்தர் அவனைத் தலைவனாகக் கொண்டு பரணி பாடினார் எனவும் தக்கயாகப் பரணியில் குறிப்பு உண்டு. இவ் இரு பரணிகளும் இப்போது கிடைத்தில.

    மனிதனுடைய பண்புகளை உருவகப்படுத்தி எழுந்த பரணிகள் மூன்று: தத்துவராய சுவாமிகள் பாடிய அஞ்ஞவதைப் பரணியும் மோகவதைப் பரணியும் முறையே அஞ்ஞானத்தையும் மோகத்தையும் வெற்றிகொண்டதையும், வைத்தியநாத தேசிகருடைய பாசவதைப் பரணி பாசத்தை வெற்றிகொண்டதையும் கூறுவன.

    தேவர்களைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு எழுந்தவை தக்கயாகப் பரணியும் இரணிய வதைப் பரணியும். ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப்பரணி சிவபெருமானுடைய கணங்கள் வீரபத்திரர் தலைமையில் தக்கன் யாகத்தை அழித்ததைக் கூறும்; சார்புக்கதையாக, ஆளுடைய பிள்ளையார் சமணரைக் கழுவேற்றிய கதை நாமகள் காளிக்குக் கூறியதாக இடையே வரும். இப்பரணிக்குத் தலைவர் வீரபத்திர தேவர். இப் பரணியைப் பாடுவித்தான் இரண்டாம் இராசராச சோழன் ( 1148-1171 ).

    ஒட்டக்கூத்தருடைய கடுமையான நடையும், தேவி உபாசனை ஆகிய யாமளநூல் கருத்துக்களும், பழைய உரையாலும், மூதறிஞர் டாக்டர் உ. வே. சாமிநாதையர் குறிப்புக்களாலுமே நமக்கு ஓரளவு விளங்குகின்றன. அப் பெரியாருக்கு நம் நன்றி என்றும் உரித்தாகுக.

    தேவரைத் தலைவனாகக் கொண்டு எழுந்த மற்றோர் பரணி இரணிய வதைப் பரணி. “வதை” என்ற சொல்லைப் பரணிக்கு அடைமொழியாகக் கொண்ட நூல்களுள் இது காலத்தால் முந்தியது. இந்நூலை மேலே ஆராய்வோம்.

    பரணிகள் யாவும் தோற்றாரையே தம் பெயரால் குறிப்பன. வென்றோர், அன்றிப் பாட்டுடைத் தலைவன், பெயர் நூலுள் எங்கோ பொதிந்து கிடக்கும். கலிங்கம், பாசம், மோகம், அஞ்ஞானம், தக்கன், இரணியன் யாவுமே இதற்குச் சான்று.