இரணிய வதைப் பரணி

3

2

2. காவிய அமைப்பு 

    பரணியின் மற்றொரு சிறப்பு அதன் காவிய அமைப்பு.

    தமிழ் மொழியிலும் ஸம்ஸ்க்ருத மொழியிலும் உண்டான காவியங்கள் அனைத்தும் அவை நிகழும் நாடு, நகரங்களின் சிறப்பை அழகு பெறக் கூறி, அவற்றின் தலைவன் தலைவியருடைய குலம், பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, யாவும் முறைபிறழாமல் வர, காவியத்தின் முக்கிய நிகழ்ச்சியோடு தலைக்கட்டுதல் மரபு. ஸம்ஸ்க்ருத காவியங்களில், சில நாடகங்கள் மட்டுமே இவ்விதிக்கு விலக்கு.

    காவிய இலக்கணத்தை ஸம்ஸ்க்ருதத்திலும் தமிழிலும் பல பெரும்புலவர்கள் இவ்வாறு அறுதி இட்டு உள்ளனர். அவர்களுள் தலைசிறந்தவர் தண்டி. வடமொழியில் முன்பே தோன்றியிருந்த “காவ்யதர்சம்” என்ற நூலை ஒட்டி, “வடநூல் வழிமுறை மரபினில் வழாது, வடநூல் உணர்ந்த தமிழ்நூல் புலவன், தாவரும் சீர்த்தி தண்டி என்பவனே, பல் காப்பியத்தும் அணிபெறும் இலக்கணம் அரிதினில் தெரிந்து வகுத்தனன்”. அத்தண்டியலங்கார நூல் இன்றும் காவிய இலக்கணத்திற்கு வலிய சான்று பகரும் சிறப்புப்பெற்றுள்ளது. தண்டியைத் தொடர்ந்த வீரசோழியம், மாறனலங்காரம் முதலிய நூல்களும் இக்கருத்தினின்று மாறுபடவில்லை.

    மேல் நாட்டு மரபு இதற்கு முற்றிலும் மாறுபட்டது. கி. மு. 4-ம் நூற்றாண்டிலே காவிய இலக்கணம் எழுதிய அரிஸ்தோதல், பெருங்காப்பிய ஆசிரியர் தாம் கூறப்புகுந்த நிகழ்ச்சியின் தொடக்கம் முதல் இறுதி காறும் வரலாறு போல எழுதக்கூடாது என அறுதி இட்டான். “ஹோமரின் பெருமை அவனுடைய காவியங்களின் இறுதி நிகழ்ச்சிக்குச் சற்று முன்பு கதையைத் தொடங்கி, மீண்டும், மீண்டும், பழைய நிகழ்ச்சிகளைப் பொறி சிதறும் பல மின்வேகப்பாய்ச்சல்களால் காவியப் பாத்திரங்களின் வாயிலாக, வெளிப்படையாகவும், குறிப்பாலும் கூறி, படிப்போர் மனத்தை ஈர்த்துச் செல்வது” என்பார் அரிஸ்தோதல். கிரேக்க லத்தீன் மொழிகளில் அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட மேம்பாடுடைய கவிஞர் எவருமே இவ்வாறு ஹோமர் வகுத்திருந்த பாதையை மீறவில்லை. ஆங்கிலப் பெருங்கவி மில்டன் தன் சுவர்க்க நீக்கத்தைப் பாதலத்தில் கிடந்த சாத்தன் மொழியுடன் தொடங்கி, பாதி நூலுக்குப் பிறகே, காப்ரியல் ஆதாமுக்குக் கூறுமுகத்தான், சாத்தனுடைய பழங்கதையைத் தெரிவிக்கிறான்.

    தமிழ் மொழிக் காவியங்களில் பரணி மட்டுமே இந்த மேல் நாட்டு மரபைப் பின்பற்றுகிறது.