பக்கம் எண் :

மதுரைக் கலம்பகம்161


சந்தவிருத்தம்
185.
மட்டறுக டற்புவிய னைத்துமொரி மைப்பினின்ம
    றைத்துடன்வி டுத்தி டுவனேற்
றெட்டுவரை யைக்கடலை முட்டியுள டக்கிடுவன்
    இத்தனையும் வித்தை யலவாற்
றுட்டமத னைப்பொடிப டுத்திமது ரைக்குளுறை
    சொக்கர்குண மெட்டி னொடுமா
சிட்டர்கடு தித்திடும கத்துவம னைத்துமொரு
    செப்பினுள டக்கி டுவனே.    
(82)

    185.(சந்தக் குழிப்பு.) தத்தனன தத்தனன தத்தனன தத்தனன தத்தனன தத்த தனனா.

    சம்பிரதம் - இந்திரசால வித்தையில் வல்லவன் தன் சிறப்பைத் தானே கூறுதல். செய்தற்கெளிய செயல்களையே செய்தற்கரிய செயல்களெனப் பொருள் படுவதற்கேற்ற சொல்லமைதியால் இதனைக் கூறுவர் ஆசிரியர்.

    மட்டு - எல்லை. ஓர் இமைப்பினின் மறைத்து உடன் விடுத்திடுவன் - ஒரு கணத்துள் மறைத்து உடனே வெளிப்படுத்துவேனென்பது வேறு பொருள்; ஒரு முறை இமைத்தலினால் மறையச் செய்து உடனே இமைத்தலை விடுப்பேனென்பது செம்பொருள்; கண்ணை இமைக்கும்போடு இமைப்பவனுக்கு அக்கணத்தில் உலகம் மறைதல் இயல்பே. ஏற்று எட்டுவரையைக் கடலை முட்டியுள் அடக்கிடுவன் - தாங்கி எட்டுமலைகளையும் சமுத்திரத்தையும் மூடிய கைக்குள் அடக்கிவிடுவேனென்பது வேறு பொருள்; வாங்கிக் கொண்டு எள் துவரை கடலையென்னும் தானியங்களை முஷ்டிக்குள் அடக்கிவிடுவேனென்பது செம்பொருள். (பி-ம்.) ‘மற்றெட்டுவரை’. இத்தனையும் வித்தையலவென்றது என் பெருவன்மையாற் செய்வனவென வேறு பொருளுக்கேற்ற குறிப்பையும், யாவரும் செய்தற்குரிய எளிய செயல்களே யெனச் செம்பொருளுக்கேற்ற குறிப்பையும் கொண்டது. துட்டமதன்: 123. குணம் எட்டாவன: தன் வயத்தனாதல், தூய உடம்பின்னாதல், இயற்கையுணர்வின்னாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருளுடைமை, முடிவிலாற்றுலுடைமை, வரம்பிலின்பமுடைமையென்பன (குறள், 9, பரிமேல்.) சிட்டர்கள் - திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் முதலியோர். ஒரு செப்பு - ஒரு சொல் (பிரணவம்); ஒருவகைப் பாத்திரம் என்பது வேறுபொருள்; “ஆங்கவர் செப்பிற் கடங்காது .............. அரங்கத்திருப்பெட் டகத்து ளொருமணியே” (தனிப்.)