பக்கம் எண் :

224சித்தர் பாடல்கள்

காற்றின் மரமுறியுங் காட்சியைப்போல் நல்லறிவு
தூற்றிவிடி லஞ்ஞானந் தூரப்போம் மடவனமே.
91
  
அக்கினியால் பஞ்சுபொதி அழிந்திட்ட வாறேபோல்
பக்குநல் லறிவாலே பாவம் போம் மடவனமே.
92
  
குளவிபுழு வைக்கொணர்ந்து கூட்டிலுருப் படுத்தல்போல்
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவனமே.
93
  
அப்புடனே யுப்புச்சேர்ந் துளவுசரி யானதுபோல்
ஒப்புறவே பிரமமுட னொன்றிநில்லு மடவனமே.
94
  
காய்ந்த இரும்புநிறங் காட்டுதல்போல் ஆத்துமத்தை
வாய்ந்திலங்கச் செய்து வளம்பெறுநீ மடவனமே.
95
  

புல்லாங்குழலூதல்

கண்ணிகள்

தொல்லைப்பிறவி தொலைக்கார்க்கு முத்திதான்
     இல்லையென் றூதுகுழல் - கோனே
     இல்லையென் றூதுகுழல்.

96
  
இந்திர போகங்கள் எய்தினுந் தொல்லையென்
     அந்தமா யூதுகுழல் - கோனே
     அந்தமா யூதுகுழல்.
97
  
மோன நிலையினில் முத்தியுண் டாமென்றே
     கானமா யூதுகுழல் - கோனே
     கானமா யூதுகுழல்.
98
  
நாற்போற் பொறிகளை நாநாவிதம் விட்டோர்
     பேயரென் றூதுகுழல் - கோனே
     பேயரென் றூதுகுழல்.
99
  
ஓடித் திரிவோர்க் குணர்வுகிட் டும்படி
     சாடியே யூதுகுழல் - கோனே
     சாடியே யூதுகுழல்.
100