இறைவனின் தாளை அடையும் மார்க்கங்களை வள்ளுவரே கடவுள் வாழ்த்தில் தெரிவித்திருக்கின்றாரே. கடவுள் வாழ்த்தில் இறைவனை அடையும் மார்க்கமா? திருக்குறள் அடிகளை அசை போட்டுப் பார்க்கின்றான். “கற்றதனா லாய பயனென் கொல் வாலறிவன் நற்றாள் தொழா அர் எனின்” தூய அறிவு வடிவான கடவுளின் திருவடிகளைத் தொழாதவன் கற்ற கல்வியினால் ஏதும் பயனில்லை என்கிறார். இறைவனின் திருவடிகளைத் தானே தொழச் சொல்கிறது. அதனை அடையும் மார்க்கம் எதனையும் கூறவில்லையே. அடுத்த குறளுக்குச் செல்கின்றான். “மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்” சரி, ஏற்றுக்கொள்வோம். அந்த மாணடி சேர வழி என்ன? விருப்பும் வெறுப்பும் இல்லாத ஆண்டவன் திருவடிகளைச் சேர்ந்தவர்க்குத் துன்பம் என்பது இல்லை. சரி, தனக்கு ஒப்பு இல்லாத கடவுளின் திருவடிகளைப் பற்றியவர் தவிர மற்றையோரால் பாவக் கடலைக்கடக்க இயலாது. சரி, எண்குணத்தானின் திருவடிகளை வணங்காதவர்களின் தலை செயலிழந்த ஐம்பொறிகளைப் போலப் பயனற்றதாகும். சரி, இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களால் மட்டுமே பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க முடியும். மற்றவர்களால் பிறவிக்கடலைக் கடக்க முடியாது. |