அந்த அனுபவத்தை மீண்டும் அனுபவிக்க அல்லது அதே இடத்தில் குண்டலினியை நிலைநிறுத்த அவரால் முடியவில்லை. இங்கு இந்த ஆறாதார குண்டலினி யோகத்தில் கவனிக்கப்படுகின்ற விஷயமும் ஒன்றிருக்கிறது. மூலாதாரத்திலிருந்து கிளம்பும் குண்டலினி அக்கினியை இடையில் தடங்கல் செய்தோமானால் யோகம் பயில்கின்றவர் பித்தாகி உயிர் துறப்பர் என்றும் சொல்லப்படுகிறது. இந்தக் கருத்தைத்தான், ‘நில்லென்று சொல்லி நிலைநிறுத்த வல்லார்க்குக் கொல் என்று வந்த நமன்” என்ற வரிகளில் தெரிவிக்கின்றார். இது இப்படியிருக்க இந்த யோக முயற்சிக்கு முன் இளமை மயக்கத்தால் மனதைக் கட்டுப்படுத்தப், படாத பாடுபட்ட நிலையை “மாமன் மகளடியோ மச்சினியோ நானறியேன் காமன் கணையெனக்கு கனலாக வேகுதடி மாமன் மகளாகி மச்சினியும் நீயானால் காமன் கணைகளெல்லாம் என் கண்ணம்மா! கண்விழிக்க வேகாவோ” முறைப் பெண்ணாக இருந்தால் என்ன அல்லது மச்சினியாகத்தான் இருந்தென்ன? இளமைப்பருவத்தில் காமன் கணையினால் படும் துன்பம் பெரியதல்லவா? அந்தக் காமன் கணைகளெல்லாம் யோகத்திலிருந்த சிவபெருமான் கண்விழிக்கச் சாம்பரானது போல, யோக தவத்திலிருந்து நான் கண் விழித்தால் அந்த யோக அனலில் காம உணர்ச்சிகளெல்லாம் வெந்து சாம்பராகி விடாதா? என்று கண்ணம்மாளைக் கேட்கின்றார். |