பக்கம் எண் :

296சித்தர் பாடல்கள்

     குண்டலினி யோகத்தைப் பற்றி மற்றொரு பாடலிலும் குறிப்பிடுகின்றார்.

“உச்சிக்குக் கீழடியோ ஊசிமுனை வாசலுக்குள்
மச்சிக்கு மேலேறி வானுதிரந்தானெடுத்துக்
கச்சை வடம் புரியக் காயலூர்ப் பாதையிலே
வச்சு மறந்தல்லோ - என் கண்ணம்மா
வகை மோசமானேண்டி”

    எவ்வளவு அருமையான விளக்கம். உச்சிக்குக் கீழே ஊசி முனை வாசல்
என்று  குறிப்பிட்டது  சுழுமுனையை  உச்சியான  மச்சிக்கு  மேலே  ஏறிய
குண்டலினி  அமுத  தாரண  செய்யும்  நிலையை  இப்பாடலில்  விளக்கம்
செய்கின்றார்.

     இவ்வளவு  யோக  விளக்கம்  கூறுமிவர்  உஞ்ச  விருத்தி  செய்தே
காலத்தைக் கழித்தாரென்று கூறப்படுகிறது.

“புல்லரிடத்திற்போய் பொருள் தனக்கு கையேந்தி
பல்லை மிகக்காட்டிப் பரக்க விழிக்கிறண்டி
பல்லை மிகக் காட்டாமல் பரக்க விழிக்காமல் - என் கண்ணம்மா
புல்லரிடம் போகாமல் என் கண்ணம்மா!
பொருளெனக்குத் தாராயோ”

     பிச்சையெடுப்பது  கேவலமானதுதான்.  ஆனால் அதைவிடக் கேவலம்
அப்படிப் பிச்சை எடுப்பவனிடம் பிச்சை போட மாட்டேன் என்று துரத்துவது
என்ற  ஒளவையாரின்  கருத்தை இவ்வரிகளில்  காட்டித் தன்னைப் பொருள்
தரா   புல்லர்களிடம்   போய்    கையேந்திப்    பல்லை    மிகக்காட்டிப்
பிச்சையெடுக்காமல்  உயிர்  வாடுவதற்கு  எனக்குப் பொருள் கொடு அம்மா
என்று மனோன்மணித் தாயிடம் (கண்ணம்மாவிடம்) வேண்டுகின்றார்.

     படிக்கப்  படிக்கப்  பரிதாபத்தைத்  தூண்டும் இவர் பாடல்கள் சித்தர்
இலக்கியத்தில் மிகப் பிரபலம்.