பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்321


அரூபமாய் நின்றானை அகண்டபரி பூரணத்தைச்
சொரூபமாய் நின்றிடத்தே - என் ஆத்தாளே
     தோன்றிற்றுத் தோன்றுமடி.
172
  
அட்சரங்கள் ஆனதுவும் அகங்காரம் ஆனதுவும்
சட்சமையம் ஆனதுவும் - என் ஆத்தாளே
     தணலாக வெந்ததடி.
173
  
சமையஞ் சமையமென்பார் தன்னைஅறியாதார்
நிமைக்குள் உளுபாயமென்பார் - என் ஆத்தாளே
     நிலமை அறியாதார்.
174
  
கோத்திரம் கோத்திரமென்பார் குருவை அறியாதார்
தோத்திரஞ் செய்வோமென்பார் - என் ஆத்தாளே
     சொரூபம் அறியாதார்.
175
  
உற்றார் நகைக்குமடி உறவர் பகைக்குமடி
பெற்றார் இணக்கமடி - என் ஆத்தாளே
     பேரில் பிணக்கமடி.
176
  
தேய்ந்த இடத்திருக்கச் சிந்தைஅறியுமனம்
ஆய்ந்த இடமெல்லாம் - என் ஆத்தாளே
     அவசமனம் வீசுதடி.
177
  
பேதிச்சு வாழ்ந்ததெல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி
சாதிஇவன் அன்றெனவே - என் ஆத்தாளே
     சமையத்தார் ஏசுவரே.
178
  
நல்லோ ருடன்கூடி நாடறிய வந்ததெல்லாம்
சொல்லவாய் உள்ளவர்கள் - என் ஆத்தாளே
     சொல்லி நகைப்பாரோ.
179
  
இன்பமுற்று வாழ்ந்ததடி என்மாயம் ஆச்சுதடி
தம்பறத் தள்ளிவிடி - என் ஆத்தாளே
     தனம்போன மாயமடி.
180
  
வல்லான் வகுத்தவழி வகையறிய மாட்டாமல்
இல்லான் இருந்தவழி - என் ஆத்தாளே
     இடம் அறியாது ஆனேன்டி.
181