மலமுஞ் சலமுமற்று மாயையற்றுமானமற்று நலமுங் குலமுமற்று நானிருப்ப தெக்காலம். | 100 |
| | |
ஓடாமலோடி உலகைவலம் வந்து சுற்றித் தேடாம லென்னிடமாய்த் தெரிசிப்ப தெக்காலம். | 101 |
| | |
அஞ்ஞானம் விட்டே அருண்ஞானத் தெல்லைதொட்டு மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவ தெக்காலம். | 102 |
| | |
வெல்லும் மட்டும் பார்த்து வெகுளியெலாம் விட்டகன்று சொல்லுமட்டுஞ் சிந்தை செலுத்துவது மெக்காலம். | 103 |
| | |
மேலாம் பதந்தேடி மெய்ப்பொருளை யுள்ளிருத்தி நாலாம் பதந்தேடி நான்பெறுவ தெக்காலம். | 104 |
| | |
எண்ணாத தூர மெல்லா மெண்ணியெண்ணிப் பாராமல் கண்ணாடிக்குள் ளொளிபோல் கண்டறிவ தெக்காலம். | 105 |
| | |
என்னை அறிந்து கொண்டே எங்கோமா னோடிருக்கும் தன்மை அறிந்து சமைந்திருப்ப தெக்காலம். | 106 |
| | |
ஆறாதா ரங்கடந்த ஆனந்தப் பேரொளியை வேறாகக் கண்டுநான் பெற்றிருப்ப தெக்காலம். | 107 |
| | |
ஆணவ மாயத்தா லழிந்துடலம் போகாமுன் காணுதலா லின்ப முற்றுக்கண்டறிவ தெக்காலம். | 108 |
| | |
மும்முலமுஞ் சேர்த்து முளைத்தெழுந்த காயமிதை நிர்மலமாய்க் கண்டுவினை நீங்கியிருப்ப தெக்காலம். | 109 |
| | |
முன்னை வினைகெடவே மூன்றுவகை காட்சியினால் உன்னை வெளிப்படுத்தி உறுவதினி யெக்காலம். | 110 |
| | |
கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும் விண்ணினொளி கண்டதுவும் வெளிப்படுவ தெக்காலம். | 111 |
| | |
கனவுகண்டாற் போலெனக்குக் காட்டிமறைத் தேயிருக்க நினைவைப் பரவெளிமேல் நிறுத்துவது மெக்காலம். | 112 |
| | |
ஆரென்று கேட்டதுவும் அறிவுவந்து கண்டதுவும் பாரென்று சொன்னதுவும் பகுத்தறிவ தெக்காலம். | 113 |