பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்337


நினைக்கும் நினைவுதொறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்கு மேற்கண்டுகண்ணில் முளைந்தெழுப்ப தெக்காலம்.

114
  
முப்பாழும் பாழாய் முதற்பாழுஞ் சூனியமாய்
அப்பாழும் பாழா அன்புசெய்வ தெக்காலம்.

115
  
சீயென் றெழுந்து தெளிந்த நின்றவான் பொருளை
நீயென்று கண்டு நிலைபெறுவ தெக்காலம்.

116
  
வவ்வெழுத்து மவ்வெழுத்தும் வாளாகுஞ் சிவ்வெழுத்தும்
யவ்வெழுத்தினுள்ளே யடங்கிநிற்ப தெக்காலம்.

117
  
எழுத்தெல்லாம் மாண்டிறந்தே ஏகமாய் நின்றதிலே
அழுத்தமாய்ச் சிந்தைவைத் தன்புகொள்வ தெக்காலம்.

118
  
அருவாய் உருவாகி ஆதியந்த மாகிநின்ற
குருவாகி வந்தெனையாட் கொண்டருள்வ தெக்காலம்.

119
  
நானென் றறிந்தவனை நானறியாக் காலமெல்லாந்
தானென்று நீயிருந்த தனையறிவ தெக்காலம்.

120
  
என்மயமாய்க் கண்டதெல்லாம் எண்ணிஎண்ணிப் பார்த்தபின்பு
தன்மயமாய்க் கொண்டதிலே சார்ந்து நிற்ப தெக்காலம்.

121
  
ஒளியி லொளியாம் உருப்பிறந்த வாறது போல்
வெளியில் வெளியான விதமறிவ தெக்காலம்.

122
  
ஒளியிட்ட மெய்ப்பொருளை யுள்வழியிலேயடைத்து
வெளியிட்டுச்சாத்திவைத்து வீடுறுவ தெக்காலம்.

123
  
காந்தம் வலித்திரும்பை கரத்திழுத்துக் கொண்டதுபோல்
பாய்ந்து பிடித்திழுத்துன் பதத்தில் வைப்ப தெக்காலம்.

124
  
பித்தாயங்கொண்டு பிரணவத்தை யூடறுத்துச்
செத்தாரைப்போலே திரிவதினி யெக்காலம்.

125
  
ஒழிந்தகருத்தினை வைத் துள்ளெலும்பு வெள்ளெலும்பாய்க்
கழிந்தபிணம்போலிருந்து காண்பதினி யெக்காலம்.

126
  
ஆதி கபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே
சாதிவகை யில்லாமற் சஞ்சரிப்ப தெக்காலம்.

127