பக்கம் எண் :

338சித்தர் பாடல்கள்

சூதுங் களவுந் தொடர்வினையுஞ் சுட்டிடக்காற்
றூதுந் துருத்தியைப் போட்டுனையடைவ தெக்காலம்.

128
  
ஆசை வலைப்பாசத் தகப்பட்டு மாயாமல்
ஓசை மணித்தீபத்தி லொன்றிநிற்ப தெக்காலம்.

129
  
கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய்
புல்லாய்ப் பிறந்த ஜென்மம் போதுமென்ப தெக்காலம்.

130
  
தக்கும் வகைக்கோர் பொருளும் சாராமலே நினைவில்
பக்குவமாய் உன்னருளைப் பார்த்திருப்ப தெக்காலம்.

131
  
தூரோ டிசைந்து சுழன்றுவருந் தத்துவத்தை
வேரோ டிசைந்து விளங்குவது மெக்காலம்.

132
  
பாக நடுவேறிப் பயந்தெழுந்த சித்திரத்தை
ஏசநடுமூலத் திருத்துவது மெக்காலம்.

133
  
ஓரின்பங் காட்டும் உயர்ஞான வீதிசென்று
பேரின்ப வீடுகண்டு பெற்றிருப்ப தெக்காலம்.

134
  
காரணமாய் வந்தென் கருத்தில் உரைத்ததெல்லாம்
பூரணமாகக் கண்டு புகழ்ந்திருப்ப தெக்காலம்.

135
  
ஆயுங் கலைகளெல்லாம் ஆராய்ந்து பார்த்ததற்பின்
நீயென்று மில்லா நிசங்காண்ப தெக்காலம்.

136
  
குறியாகக் கொண்டு குலமளித்த நாயகனைப்
பிரியாமற் சேர்ந்து பிறப்பறுப்ப தெக்காலம்.

137
  
மத்தடுத்து நின்று மருளாடு வார்போல
பித்தடுத்து நின்னருளைப் பெற்றிருப்ப தெக்காலம்.

138
  
சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன்னடிக்கீழ்
வேகாமல் வெந்திருக்க வேண்டுவது மெக்காலம்.

139
  
என்னை யறியாம லிருந்தாட்டுஞ் சூத்திரநின்
தன்னை யறிந்து தவம் பெறுவ தெக்காலம்.

140
  
உள்ள மறியா தொளித்திருந்த நாயகனைக்
கள்ள மனந் தெளிந்து காண்பதினி யெக்காலம்.

141