பக்கம் எண் :

340சித்தர் பாடல்கள்

ஆதிமுத லாகிநின்ற அரியென்ற வட்சரத்தை
ஓதி யறிந்துள்ளே யுணர்வதினி யெக்காலம்.

156
  
சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயரறுப்ப தெக்காலம்.

157
  
அல்லும் பகலுமென்றன் அறிவையறி வாலறிந்த
சொல்லும் முறைமறந்து தூங்குவது மெக்காலம்.

158
  
இயங்குஞ் சராசரத்தில் எள்ளுமெண்ணெ யும்போல
முயங்குமந்த வேத முடிவறிவ தெக்காலம்.

159
  
ஊனாகி யூனில் உயிராகி யெவ்வுலகுந்
தானாகி நின்ற தனையறியவ தெக்காலம்.

160
  
என்னைவிட்டு நீங்காம என்னிடத்து நீயிருக்க
உன்னைவிட்டு நீங்கா தொருப்படுவ தெக்காலம்.

161
  
இன்னதென்று சொல்லவொண்ணா எல்லையற்றவான் பொருளைச்
சொன்ன தென்று நானறிந்து சொல்வதினி யெக்காலம்.

162
  
மனதையொரு வில்லாக்கி வான்பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி எய்வதினி யெக்காலம்.

163
  
என்னை இறக்கவெய்தே என்பதியை யீடழித்த
உன்னை வெளியில்வைத்தே ஒளித்துநிற்ப தெக்காலம்.

164
  
கடத்துகின்ற தோணிதனைக் கழைகள் குத்தி விட்டாற்போல்
நடத்துகின்ற சித்திரத்தை நானறிவ தெக்காலம்.

165
  
நின்றநிலை பேராமல் நினைவிலொன்றும் சாராமல்
சென்றநிலை முத்தியென்று சேர்ந்தறிவ தெக்காலம்.

166
  
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொற்பதத்தை யுள்ளமைத்து
மின்னு மொளிவெளியே விட்டடைப்ப தெக்காலம்.

167
  
கூட்டிலடைப் பட்டபுழு குளவியுருக் கொண்டதுபோல்
வீட்டிலடைப் பட்டருளை வேண்டுவது மெக்காலம்.

168
  
கடலில் ஒளித்திருந்த கனலெழுந்து வந்தாற்போல்
உடலில் ஒளித்தசிவம் ஒளிசெய்வ தெக்காலம்.

169