பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்341


அருணப் பிரகாசம் அஇண்டமெங்கும் போர்த்ததுபோல்
கருணைத் திருவடியில் கலந்துநிற்ப தெக்காலம்.

170
  
பொன்னிற் பலவிதமாம் பூரணமுண் டானாது போல்
உன்னிற் பிறந்ததுன்னில் ஒடுங்குவது மெக்காலம்.

171
  
நாயிற் கடைப்பிறப்பாய் நான்பிறந்த துன்பமற
வேயிற் கனலொளிபோல் விளங்குவது மெக்காலம்.

172
  
சூரிய காந்தியொளி சூழ்ந்து பஞ்சைச் சுட்டதுபோல்
ஆரியன் தோற்றத் தருள்பெறுவ தெக்காலம்.

173
  
இரும்பிற் கனல்மூட்டி இவ்வுருபோய் அவ்வுருவாய்க்
கரும்பிற் சுவைரசத்தைக் கண்டறிவ தெக்காலம்.

174
  
கருக்கொண்ட முட்டைதனை கடலாமை தானினைக்க
உருக்கொண்டவாறதுபோல் உனையடைவ தெக்காலம்.

175
  
வீடுவிட்டுப் பாய்ந்து வெளியில் வருவார்போல்
கூடுவிட்டுப் பாயுங் குறிப்பறிவ தெக்காலம்.

176
  
கடைந்த வெண்ணை மோரிற் கலவாத வாறதுபோல்
உடைந்து தமியேன் உனைக்காண்ப தெக்காலம்.

177
  
இருளை ஒளிவிழுங்கி ஏகவுருக் கொண்டாற்போல்
அருளை விழுங்குமிருல் உகன்றுநிற்ப தெக்காலம்.

178
  
மின்னெழுந்து மின்னொடுங்கி விண்ணில் உறைந்தாற்போல்
என்னுள்நின்றது என்னுள்ளே யானறிவ தெக்காலம்.

179
  
கண்ட புனற்குடத்திற் கதிரொளிகள் பாய்ந்தாற்போல்
கொண்ட சொரூபமதைக் கூர்ந்தறிவ தெக்காலம்.

180
  
பூணுகின்ற பொன்னணிந்தாற் பொன்சுமக்குமோ வுடலை
காணுகின்ற என்கருத்திற் கண்டறிவ தெக்காலம்.

181
  
செம்பிற் களிம்புபோற் சிவத்தை விழுங்குமிக
வெம்பிநின்ற மும்மலத்தை வேறுசெய்வ தெக்காலம்.

182
  
ஆவியுங் காயமும்போல் ஆத்துமத்து நின்றதனைப்
பாவி யறிந்துமனம் பற்றிநிற்ப தெக்காலம்.

183