பக்கம் எண் :

342சித்தர் பாடல்கள்

ஊமைக் கனாக்கண் டுரைக்கறியா இன்பமதை
நாமறிந்து கொள்வதற்கு நாள்வருவ தெக்காலம்.

184
  
சாகாச் சிவனடியைத் தப்பாதார் எப்போதும்
போகா உடலகன்று போவதென்ப தெக்காலம்.

185
  
நிட்டை தனைவிட்டு நினைவறிவு தப்பவிட்டு
வெட்ட வெளியில் விரவிநிற்ப தெக்காலம்.

186
  
வெட்டவெளி தன்னில் விளைந்த வெம்பாதத்தை
திட்டமுடன் கண்டு தெளிவதினி யெக்காலம்.

187
  
எங்கும் பரவடிவாய் என்வடிவு நின்வடிவாய்க்
கங்குல்பக லின்றியுனைக் கண்டிருப்ப தெக்காலம்.

188
  
உண்டதுவும் மாதருடன் கூடிச் சேர்ந்தின்பங்
கண்டதுவு நீயெனவே கண்டு கொள்வ தெக்காலம்.

189
  
ஈமென்று கேட்டதுவும் என்னுள்ளே நின்றதுவும்
ஓமென்று சொன்னதுவும் உற்றறிவ தெக்காலம்.

190
  
சத்தம் பிறந்தவிடந் தன்மயமாய் நின்றவிடஞ்
சித்தம் பிறந்தவிடந் தேர்ந்தறிவ தெக்காலம்.

191
  
போக்கு வரவும் புறம்புள்ளு மாகிநின்றும்
தாக்கு மொரு பொருளைச் சந்திப்ப தெக்காலம்.

192
  
நானெனவு நீயெனவு நாமிரண்டு மற்றொன்றும்
நீயெனவே சிந்தைதனி நேற்படுவ தெக்காலம்.

193
  
அறிவையறி வாலறிந்தே அறிவும் அறிவுதனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பதினி யெக்காலம்.

194
  
நீடும் புவனமெல்லாம் நிறைந்துசிந் தூரமதாய்
ஆடும் திருக்கூத்தை அறிவதினி யெக்காலம்.

195
  
தித்தியென்ற கூத்தும் திருச்சிலம்பி னோசைகளும்
பத்தியுடனே கேட்டுப் பணிவதினி யெக்காலம்.

196
  
நயனத் திடைவெளிபோய் நண்ணும் பரவெளியில்
சயனத் திருந்து தலைப்படுவ தெக்காலம்.

197