பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்343


அருவி மலைநடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையா டற்கண்டு தெரிசிப்ப தெக்காலம்.

198
  
மீனைமிக வுண்டு நக்கி விக்கிநின்ற கொக்கதுபோல்
தேனைமிக வுண்டு தெவிட்டிநிற்ப தெக்காலம்.

199
  
பொல்லாத காயமதைப் போட்டு விடுக்குமுன்னே
கல்லாவின் பால்கறப்பக் கற்பதினி யெக்காலம்.

200
  
வெட்டவெளிக் குள்ளே விளங்குஞ் சதாசிவத்தைக்
கிட்டிவரத் தேடிக் கிருபை செய்வ தெக்காலம்.

201
  
பேரறிவி லேமனதை பேசாம லேயிருத்தி
ஓரறிவி லென்னாளும் ஊன்றிநிற்ப தெக்காலம்.

202
  
அத்துவிதம் போலுமென்றன் ஆத்துமத்தினுள்ளிருந்து
முத்திதர நின்ற முறையறிவ தெக்காலம்.

203
  
நானின்ற பாசமதில் நானிருந்து மாளாமல்
நீநின்ற கோலமதில் நிரவிநிற்ப தெக்காலம்.

204
  
எள்ளும்கரும்பும் எழுமலரும் காயமும்போல்
உள்ளும் புறம்புநின்ற துற்றறிவ தெக்காலம்.

205
  
அன்னம் புனலைவகுத் தமிர்தத்தை யுண்டதுபோல்
என்னைவகுத் துன்னை இனிக்காண்பதெக்காலம்.

206
  
அந்தரத்தில் நீர் பூத் தலர்ந்தெழுந்த தாமரைபோல்
சிந்தைவைத்துக் கண்டு தெரிசிப்ப தெக்காலம்.

207
  
பிறப்பும் இறப்புமற்றுப் பேச்சுமற்று மூச்சுமற்று
மறப்பும் நினைப்புமற்று மாண்டிருப்ப தெக்காலம்.

208
  
மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்தறிவை
என்னு ளொருநினைவை எழுப்பிநிற்ப தெக்காலம்.

209
  
ஆசைகொண்டமாதர் அடைகனவு நீக்கியுன்மேல்
ஓசைகொண்டு நானும் ஒடுங்குவது மெக்காலம்.

210
  
தன்னுயிரைக் கொண்டு தான்றிரிந்த வாறதுபோல்
உன்னுயிரைக் கொண்டிங் கொடுங்குவது மெக்காலம்.

211