பக்கம் எண் :

344சித்தர் பாடல்கள்

சேற்றிற் கிளைநாட்டுந் திடமாம் உடலையினிக்
காற்றிலுழல் சூத்திரமாய்க் காண்பதினி யெக்காலம்.

212
  
என்வசமுங் கெட்டிங் கிருந்தவச மும்மழிந்து
தன்வசமுங் கெட்டருளைச் சார்ந்திருப்ப தெக்காலம்.

213
  
தன்னை மறந்து தலத்து நிலைமறந்து
கன்மம் மறந்து கதி பெறவ தெக்காலம்.

214
  
என்னை யென்னிலே மறைந்தே இருந்தபதி யும்மறந்து
தன்னையுந் தானேமறந்து தனித்திருப்ப தெக்காலம்.

215
  
தன்னையுந் தானேமறந்து தலைவாசற் றாழ்போட்டே
உன்னைநினைந் துள்ளே யுறங்குவது மெக்காலம்.

216
  
இணைபிரிந்த போதிலன்றி யின்பமுறும் அன்றிலைப்போல்
துணைபிரிந்த போதருள்நூல் தொடர்ந்து கொள்வ தெக்காலம்.

217
  
ஆட்டம் ஒன்றுமில்லாமல் அசைவுசற்றுங் காணாமல்
தேட்டமற்ற வான்பொருளைத் தேடுவது மெக்காலம்.

218
  
முன்னைவினை யாலறிவு முற்றாமற் பின்மறைந்தால்
அன்னை தனைத்தேடி அமுதுண்ப தெக்காலம்.

219
  
கள்ளுண் டவன்போற் களிதருமா னந்தமதால்
தள்ளுண்டு நின்றாடித் தடைப்படுவ தெக்காலம்.

220
  
தானென்ற ஆணவமுந் தத்துவமுங் கெட்டொழிந்தே
ஏனென்ற பேச்சுமிலா திலங்குவது மெக்காலம்.

221
  
நானவனாய்க் காண்பதெல்லா ஞானவிழி யாலறிந்து
தானவனாய் நின்று சரணடைவ தெக்காலம்.

222
  
தானந்த மில்லாத தற்பரத்தி னூடுருவி
ஆனந்தங் கண்டே அமர்ந்திருப்ப தெக்காலம்.

223
  
உற்ற வெளிதனிலே உற்றுப்பார்த் தந்தரத்தே
மற்ற மறமாய்கை மாள்வதினி யெக்காலம்.

224
  
ஏடலர்ந்த பங்கயமும் இருகருணை நேத்திரமுந்
தோடணிந்த குண்டலமுந் தோன்றுவது மெக்காலம்.

225