நானிலாத தொன்றுமில்லை நானுமில்லை நண்ணிடில் தானிலாத தொன்றுமே தயங்கியாடு கின்றதே. | 230 |
| | |
சுழித்ததோர்எழுத்தையுன்னி சொல் முகத்திருத்தியே துன்பஇன்ப முங்கடந்து சொல்லும்நாடி யூடுபோய் அழுத்தமான வக்கரத்தின் அங்கியை எழுப்பியே ஆறுபங்கயங் கடந் தப்புறத்து வெளியிலே. | 231 |
| | |
விழித்தகண் குவித்தபோது அடைந்து போயெழுத்தெலாம் விளைத்துவிட்ட இந்திரசால வீடதான வெளியிலே அழுத்தினாலு மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை ஆனதே. | 232 |
| | |
நல்லமஞ் சனங்கள்தேடி நாடிநாடி ஓடுறீர் நல்லமஞ் சனங்களுண்டு நாதனுண்டு நம்முளே எல்லமஞ் சனங்கள் தேடி ஏக பூசை பண்ணினால் தில்லைமேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே. | 233 |
| | |
உயிரகத்தில் நின்றிடும் உடம்பெடுத்த தற்குமுன் உயிரகாரம் ஆயிடும் உடலுகாரம் ஆயிடும் உயிரையும் உடம்பையும் ஒன்றுவிப்ப தச்சிவம் உயிரினால் உடம்புதான் எடுத்தவாறு உரைக்கிறேன். | 234 |
| | |
அண்டமேழும் உழலவே அணிந்த யோனி உழலவே பண்டுமால் அயனுடன் பரந்துநின்று உழலவே எண்டிசை கடந்துநின்ற இருண்டசத்தியு உழலவே அண்டரண்டம் ஒன்றதாய் ஆதிநட்டம் ஆடுமே. | 235 |
| | |
உருவநீர் உறுப்புகொண்டு உருத்தரித்து வைத்திடும் பெரியபாதை பேசுமோ பிசாசையொத்த மூடரே கரியமாலும் அயனுமாக காணொணாத கடவுளை உரிமையாக வும்முளே உணர்ந்துணர்ந்து கொள்ளுமே. | 236 |
| | |
பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அதென்றுநீர் எண்ணமுற்றும் என்னபே ருரைக்கிறீர்கள் ஏழைகாள் பண்ணவும் படைக்கவும் படைத்துவைத் தளிக்கவும் ஒண்ணுமாகி உலகளித்த வொன்றை நெஞ்சிலுன்னுமே. | 237 |