குருக்கொடுத்த தொண்டரும் குகனொடிந்த பிள்ளையும் பருத்திபட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே. | 245 |
| | |
அன்னைகர்ப்ப அறையதற்குள் அங்கியின் பிரகாசமாய் அந்தறைக்குள் வந்திருந்து அரியவிந்து ரூபமாய் தன்னையொத்து நின்றபோது தடையறுத்து வெளியதாய் தங்கநற் பெருமைதந்து தலைவனாய் வளர்ந்ததே. | 246 |
| | |
உன்னையற்ப நேரமும் மறந்திருக்க லாகுமோ உள்ளமீது உறைந்தெனை மறப்பிலாத சோதியை பொன்னைவென்ற பேரொளிப் பொருவிலாத ஈசனே பொன்னடிப் பிறப்பிலாமை யென்று நல்கவேணுமே. | 247 |
| | |
பிடித்ததெண்டும் உம்மதோ பிரமமான பித்தர்காள் தடித்தகோல மத்தைவிட்டு சாதிபேதங் கொண்மினோ வடித்திருந்த தோர்சிவத்தை வாய்மைகூற வல்லிரேல் திடுக்கமுற்ற ஈசனைச் சென்றுகூட லாகுமே. | 248 |
| | |
சத்திநீ தயவுநீ தயங்குசங்கின் ஓசைநீ சித்திநீ சிவனுநீ சிவாயமாம் எழுத்துநீ முத்திநீ முதலுநீ மூவரான தேவர்நீ அத்திறமும் உம்முளே அறிந்துணர்ந்து கொள்ளுமே. | 249 |
| | |
சட்டையிட்டு மணிதுலங்கும் சாத்திரச் சழக்கரே பொஸ்தகத்தை மெத்தவைத்து போதமோதும் பொய்யரே நிட்டையேது ஞானமேது நீரிருந்த அக்ஷரம் பட்டையேது சொல்லிரே பாதகக் கபடரே. | 250 |
| | |
உண்மையான சுக்கிலம் உபாயமாய் இருந்ததும் வெண்மையாகி நீரிலே விரைந்து நீர தானதும் தண்மையான காயமே தரித்துருவ மானதும் தெண்மையான ஞானிகாள் தெளிந்துரைக்க வேணுமே. | 251 |
| | |
வஞ்சகப் பிறவியை மனத்துளே விரும்பியே அஞ்செழுத்தின் உண்மையை அறிவிலாத மாந்தர்காள் வஞ்சகப் பிறவியை வதைத்திடவும் வல்லிரேல் அஞ் செழுத்தின் உண்மையை அறிந்துகொள்ள லாகுமே. | 252 |