பக்கம் எண் :

552சித்தர் பாடல்கள்

ஆனந்த மாகி யறிவை
     அறிந்தவர் அட்சரம் தானறிவார்.
10
  
ஏக வெளியில் இருக்கின்ற
     சக்கரம் ஏது மறியார்கள்
சாகாக்கால் என்றும் வேகாத்
     தலையையென்றும் தானே அறிவாரோ.
11
  
வாதங்கள் செய்வது வேரொன்றும்
     இல்லை வாசி அறிந்தோர்க்கு
நாதம் பிறந்திடக் கண்டறிந்
     தோர்கள் நான் என்று சொல்லுவரோ?
12
  
யோகமும் ஞான முகந்து
     அறிந்தோர்கள் உண்மை அறிவார்கள்
தாகமும் பசியும் கோபமும்
     வந்தவர் தாமும் அறிவாரோ?
13
  
தானென்ற தத்துவ மாயை
     அறுத்தவர் தன்னை அறிந்தோர்கள்
ஊனென்ற ஊமை எழுத்தை
     அறிந்தவர் உற்பனந் தானறிவார்.
14
  
சூட்சாதி சூட்சங்கள் என்று
     மௌனத்தின் சொல்லும் பொருளறிந்தால்
பேச்சோடே பேச்சாகப் பேசி
     இருப்பரைப் பெரியோர் தாமறிவார்.
15
  
பேசாது இருந்த மௌனங்கள்
     என்பது பேசத் தெரிந்தோர்கள்
ஆசான் உரைத்த உபதேசம்
     என்று அறிவுள்ளோர் தானறிவார்.
16
  
வாதமும் ஞானமும் ஒன்றென்று
     சொல்வதும் வையகத் தோர்அறிய
சூதகங் கெந்தியும் தாளகம்
     வங்கமும் சொல்லும்நா தங்களல்லோ?
17