சித்தர்மனம் மலர்ந்திட்டா லதுவே போதும் வெத்துவெறும் விளையாட்டும் சித்தி யாகும் துத்தியெனும் பணத்துத்தி யிலையின் சாற்றில் துரிசறுத்துத் தவஞ்செய்வார் தவத்தின் போக்கில் வித்திதெனும் விந்துவூடன் நாதங்கூட்டி வேதமுழங் கிடஞான வீறு கொண்டே துத்தமறத் தானொடுங்கத் தூய்மை பெற்ற துப்புறவே சித்திக்காம் துறவு கோலே. | 4 |
| |
பயனில்லாச் சொல்லகற்றிப் பயனே கூறல் பயனதையு மினிதான பழமாய்ச் செப்பல் நயனில்லாக் கடுவழிக ளவைவிட் டோடல் நாட்டமெலா மருள்நாட்ட மாகக் கொள்ளல் அயனில்லா தெவையுந்தா னாகக் காணல் அத்துவிதத் தாலின்பச் சித்தம் பேணல் இவையெல்லா மருங்குணமா மீசற் கன்பாம் இடர்நீக்கிச் சுடர்காட்டும் நியமந் தானே. | 5 |
| |
சித்தரெலாம் உண்மைதனை மறைத்தா ரென்றே செப்பிமனப் பால்குடிக்க வேண்டாம் சொன்னேன் சித்தர்மொழி நூலதனைத் தொட்டபோதே சித்தரெலா மொற்றரெனச் சேர்ந்து நிற்பார் சித்தமுறுங் குணநிறைவில் நாட்டம் கொள்வார் சிறிதழுக்கைக் கண்டாலும் விலகிப் போவார் சித்தநிறை வுள்ளவர்க்கே சித்தி தோன்றும் சித்தமிலார் வித்தையெலாம் சிரிப்பே கண்டீர்! | 6 |
| |
தேவாரம் வாசகந்தான் திகழக் கூட்டித் திருவாயின் மொழியெல்லா முருவாய்ச் சேர்த்து போவாரைப் போகாரைப் புலம்ப வைத்து போக்கற்றார் தமக்குமொரு போக்குக் காட்டி கோவாரம் பூவாரம் கொழிக்க விட்டு கோலமுறச் செய்தாலும் குவல யத்தின் பூபாரம் குறைத்திடுமோ குறைக்கொண்ணாது புகன்றிட்டே னவள் போக்கைப் புகன்றிட்டேனே! | 7 |