பக்கம் எண் :

582சித்தர் பாடல்கள்

ஊறுசுவை யொளிநாற்றம் ஒளியே யென்ன
     உலகத்திலே திரிந்து கடலிற் புக்கு
வீதிதிரை நுரைகுமழி விளையாட் டார்ந்து
     வினைவிதிகள் வினைவெறிகள் வேகந் தேய்ந்து
ஆறுவரக் குருவருளை யணைந்து பொங்கி
     அண்டாண்ட சாரத்தை யறிந்து கொண்டே
சாறுகொள்ளச் சிந்தனையுங் குவிந்து நிற்கும்
     சகஜநிலை யேயோகசமாதி கண்டீர்.
8
  
சிந்தித்தா லதுபாவம் சிணுங்கி னாலோ
     சேருவது காமமடா தங்கி தங்கிச்
சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில்
     சாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி
வந்தித்தால் வாதமடா வீண்வி வாதம்
     வாகான மோகமடா மங்கிப் பொங்கி
நிந்தித்தால் நாசமடா நினைவுப் புந்தி
     நிலையமடா மாயையதான் மயக்குத்தானே.
9
  
வருத்தித்தான் சொல்வதிலென் வலுவுண் டாமோ
     வருத்துவதாற் பலங்குறையும் மௌனம் போகும்
அருந்தித்தான் பருகிடுவான் ருசியைக் காணான்
     அமுதப்பால் குடித்தவனே அமர னாவான்
துருந்தித்தான் பசியறிவான் வாணி யானை
     சோபையுறுஞ் சேணியனை விலக்கி யப்பால்
பொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும்
     பொக்கமதே யாசனமாம் யோகங் கண்டீர்.
10
  
பாருலகி லான்மாவின் ஞானம் தேடப்
     பலநூல்கள் கற்றறிந்தும் தெளிவில் லாமல்
நேரியலும் நதியதன் நீர் குளியார் தேத்து
     நெட்டிநீர் கசிந்திடுவார் நெறியைக் காணார்
சீரியலும் பற்றற்ற நீரைக் காணார்
     தேக்கி வந்து சிதறியநீர்த் தேக்க முண்பார்
ஆரறிவார் அடடாடா அடடா டாடா
     அடயோகத் தவநிலைநிலை யதனைத் தானே.
11