பக்கம் எண் :

590சித்தர் பாடல்கள்

போய்மலை ஏறி வெறுங்கருங் கற்கே
     பொன்முடி, முத்தணி புனைவார்
ஏய்ந்தபுன் மடமை இதுகொலோ சமயம்?
     ஏழையர்க் கிரங்குமென் நெஞ்சே?
8
  
பாலிலாச் சேய்கள், பசி, பணியாளர்
     பல்துயர் பெருமிந் நாட்டில்
பாலொடு தயிர், நெய், கனி, சுவைப் பாகு
     பருப்பு நல் அடிசிலின் திரளை
நூலணி வார்தம் நொய்யையே நிரப்ப
     நுழைத்தகல் உருவின் முன் படைத்தே
சாலவும் மகிழ்வார் இதுகொலோ சமயம்?
     சழக்கினுக் கழலுமென் நெஞ்சே!
9
  
அன்பிலார் உயிர்கட் களியிலார்; தூய்மை
     அகத்திலார்; ஒழுக்கமுமில்லார்
வன்பினால் பிறரை வருததுவர்; எனினும்
     வகைபெற உடம்பெலாம் பூசி
முன்தொழுகையர்; முறைகளில் தவறார்
     முழுகுவார் துறைதொறும் சென்றே!
நன்றுகொல் முரண்பாடு! இதுகொலோ சமயம்?
     நடலையர்க் குடையுமென் நெஞ்சே!
10
  
மெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து
     மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும்
பொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை
     புரிதலே இறையுணர் வன்றோ!
செய்கையால், வழக்கால், அச்சத்தால், மடத்தால்
     செய்பொருள் இறைஎனத் தொழுவார்?
உய்வரோ இவர்தாம்? இதுகொலோ சமயம்?
     உணர்விலார்க் குழலுமென் நெஞ்சே!
11