பக்கம் எண் :

94சித்தர் பாடல்கள்

பத்தியோடு அரன்பதம் பணிந்திடாத பாவிகாள் !
முத்திஇன்றி பாழ்நரகில் மூழ்கிநொந்து அலைவரே.
546
  
கல்லு வெள்ளி செம்பிரும்பு காய்ந்திடும் தராக்களில்
வல்லதேவ ரூபபேதம் அங்கமைத்துப் போற்றிடில்
தொல்லைஅற் றிடப்பெரும் சுகந்தருமோ சொல்லுவீர்
இல்லை இல்லை இல்லை இல்லை ஈசன் ஆணை இல்லையே.
547
  
இச்சகம் சனித்ததுவும் ஈசன்ஐந்து எழுத்திலே
மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்து எழுத்திலே
உச்சிதப் பலஉயிர்கள் ஓங்கல் அஞ்செழுத்திலே
நிச்சயமெய்ஞ் ஞானபோதம் நிற்கும் ஐந்தெழுத்திலே.
548
  
சாத்திரங்கள் பார்த்துப் பார்த்து தான் குருடு ஆவதால்
நேத்திரங்கெட வெய்யோனை நேர்துதிசெய் மூடர்கள் !
பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல்
சூத்திரப்படி யாவரும் சுத்தர் ஆவர் அங்ஙனே.
549
  
மனவுறுதி தானிலாத மட்டிப்பிண மாடுகள்
சினமுறப் பிறர் பொருளைச் சேகரித்து வைத்ததைத்
தினந்தினம் ஊர் எங்கும் சுற்றி திண்டிக்கே அலைபவர்
இனமதில் பலர்கள் வையும்; இன்பம் அற்ற பாவிகள்.
550
  
சிவாயவசி என்னவும் செபிக்க இச்சகம் எலாம்
சிவாயவசி என்னவும் செபிக்கயாவும் சித்தியாம்
சிவாயவசி என்னவும் செபிக்கவானம் ஆளலாம்
சிவாயவசி என்பதே இருதலைத்தீ ஆகுமே.
551