பக்கம் எண் :

96சித்தர் பாடல்கள்

மருதவாணனுக்குப்   பித்துப்   பிடித்து   விட்டதோ   என்றஞ்சிய  அவர்
வீட்டினுள்ளே  சிறை  வைத்தார். வரட்டிகளை வெளியே எறிய வரட்டிக்குள்
வைரக்கற்கள்  சிதறின.  தவிடெல்லாம்  தங்கமாக  மின்ன திகைத்துப்போன
திருவெண்காடர்  தம்  மகனைப்  பாராட்டத்  தேடுகையில்  அவரோ  தம்
அன்னையாரிடம்  சிறு  பேழையைக் கொடுக்கச் சொல்லிக் கொடுத்து விட்டு
மறைந்து விட்டிருந்தார்.

     மைந்தன்  கொடுத்துவிட்டுச்  சென்றிருந்த பேழையில் காதற்ற ஊசியும்
ஓர்  ஓலைச்சீட்டும்  இருந்தது.  அதில்  ‘காதற்ற  ஊசியும்  வாராது  காண்
கடைவழிக்கே’*  என்று  எழுதப்பட்டிருந்தது. வாழ்க்கையின் நிலையாமையை
உணர்ந்து  கொண்ட  திருவெண்காடர்  தமது  மைந்தனாக  இதுநாள் வரை
இருந்தது  திருவிடைமருதூர்  பெருமான்தான்  என்பதை  உணர்ந்து  மனம்
வருந்தித் துறவறம் பூண்டார்.

     *“காதற்ற  ஊசியும்  வாராதே காணும் கடைவழிக்கே” பட்டினத்தாரின்
இந்த  வாசகமும்  பாடலும்  புதுச்சேரி  கருவடிக்குப்பம் சுடுகாட்டில் உள்ள
அரிச்சந்திரன் கோவிலில் கல்வெட்டாய் பதிக்கப்பட்டு உலக நிலையாமையை
உணர்ந்து நடக்க வேண்டுகிறது.

     இந்தத்  துறவு  நிலை  வருவதற்கு முன் தன் மனம் இருந்த நிலையை
பொருளாசை,   பெண்ணாசை,   வித்தையாசை  என்று  மனம்   ஆசையின்
வாய்க்கப்பட்டு   அலைக்கழிப்புற்ற   நிலையை   அழகிய   கண்ணிகளாகப்
பாடுகின்றார்.

“அறியாமை யாம் மலத்தால் அறிவுமுதல் கெட்டனடா
பிறியா வினைப் பயனால் பித்துப் பிடித்தனடா”

“மாமாயை என்னும் வனத்தில் அலைகிறண்டா”
“மண்ணாசைப் பட்டேனை மன்ணுண்டு போட்டதடா”