பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்97


“பொன்னாசை பெண்ணாசை போகேனே என்குதே”

“மக்கள் சுற்றத் தாசை மறக்கேனே என்குதே;
திக்கரசாம் ஆசையது தீரேனே என்குதே”

“வித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே;
சித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே”

“மந்திரத்தில் ஆசை மறக்கேனே என்குதே
சுந்தரத்தில் ஆசை துறக்கேனே என்குதே”

“கட்டுவர்க்கத்து ஆசை கழலேனே என்குதே
செட்டுதனில் ஆசை சிதையேனே என்குதே”

     இதுமட்டுமா, இந்த ஆசையைத் தூண்டும் ஐந்து புலனும் அவருக்கு
அடங்கா நிலையையும் தெரிவிக்கின்றார்.

“ஐந்து புலனும் அடங்கேனே என்குதே;
சிந்தை தவிக்கிறதும் தேறேனே என்குதே”

காமக் குரோதம் கடக்கேனே என்குதே
நாமே அரசென்று நாள்தோறும் எண்ணுதே
அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே

என்று அழுகிறார்.

     நேற்றிருந்தோர்   இன்று   இல்லை.   கண்ணுக்குக்   கண்ணெதிரே
உடல்களெல்லாம்  கட்டையில்  வேகக் கண்டும் இந்த உடலை நித்தியமான
தென்று  எண்ணி  நிரந்தரமாக   இருப்போமென்று   எண்ணி  ஆங்காரம்
கொள்ளுகிறதே,  நீர்க்குமிழி  போன்ற இவ்வாழ்க்கை ஒரு பெருங்காற்றுக்குத்
தங்காதே. பெண்ணாசை மனதை அணுஅணுவாய்ச் சித்திர வதை செய்கிறதே.
அரும்பு  விழியழகும்,  குதம்பை முலையழகும் உரகப்படத் தல்குல் அழகும்,
‘ஆவி உண்பேன்’ என்று என்னை அலைக்கழிக்கின்றதே’.

கன்னி வனநாதா ! கன்னி வனநாதா !
புல்லாகிப் பூடாய்ப் புலந்தநாள் போதாதோ?