|
போராடப் புறப்பட்டோம்!
திசைபடிந்த இருள்கீறித்
திரைபடிந்த கடலின்மேல்
சிரித்த வண்ணம்,
இசைபடிந்த கதிர்வந்தான்
எனவந்த தமிழ்மக்காள்!
எதிர்த்து நம்மை,
வசைபடிந்த உள்ளத்தார்
வழிபடிந்த கள்ளத்தார்
வலிகுன்றிப் போய்,
விசையொடிந்து கிடக்கின்றார்
வீரர்நாம் நடக்கின்றோம்
விடுதலைக் கே!
வில்லெழுதிப் புலியெழுதி
விரைகின்ற கயலெழுதி
வெற்றி கொண்ட,
சொல்லெழுதி இமவானிற்
சுடர்கின்ற புகழ்எழுதித்
தொழுவதற் கோர்,
கல்லெழுதிக் கற்புடைய
கண்ணகிக்குக் கவின்எழுதிக்
கதிர் விடுக்கும்
எல்லெழுதித் திராவிடர்
என்கின்ற பெயர்எழுதி
இன்பம் பெற்றோம்!
|