|
சங்கத்துத் தமிழ் நமது!
சாகாத புகழ் நமது!
...............................
வங்கத்துக் கதை நமது!
வைகையொடு காவிரியும்
பொருநையுஞ் சேர்,
தங்கத்துப் புனல் நமது!
தமிழ்நாடு நமது! வெம்
பகைவர் கூடி,
அங்கத்தைப் பிளந்தாலும்
அணையாத சுடர் நமதே!
அறிக மன்னோ!
கடல் விழுங்கிக் கபாடத்தைக்
காலனிடம் சேர்த்ததுகாண்!
கவின்பு காரின்,
உடல் விழுங்கித் தென்மதுரை
உயர் விழுங்கிச் சென்றதுகாண்!
ஊழி வெள்ளம்,
குடல் விழுங்கும் உணவென்றே
கொள்ளைபோய் விட்டனகாண்
தமிழ்ச் செல்வங்கள்!
அடல் விழுங்கும் காலத்தை
வென்றொருவன் உயிர்பெற்றான்
அவன்யா ரேயோ?
உலகத்து முதல்மனிதன்!
ஊழிக்குத் தப்பியவன்!
உடன் றெழுந்த,
கலகத்தைப் பலர் செய்யக்
கடுந்துயரிற் சிக்கியவன்
கண் விழித்துத்
திலகத்தை யிடுகின்றான்
திருவாய்ந்த நெற்றியிலே!
செந்தமிழ்ச் சீர்,
இலகத்தான் போகின்ற
தென்றெழுந்த தமிழன் காண்!
இளமை யோன் காண்!
|