பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 111

சேரர்களும் சோழர்களும் 
       தென்பாண்டி மன்னர்களும்
       திகழ்ந்த நாட்டைப்,
பேரர்களும் அவர்பெற்ற
       பிள்ளைகளும் ஆளாமற்
       பிழைக்க வந்த,
ஊரார்களும் ஓநாயும் 
       ஊராண்மை பாராட்ட
       ஒதுங்கி நின்றோம்,
தீரர்களின் வாழ்வெங்கே?
       சேர்ந்தஇத் தாழ்வெங்கே?
       சிந்திப்பீரே!

கற்சுமந்த கனகர்க்கு
       விசயற்குக் கைகட்டி
       வாழ்தலிற் போய்,
புற்சுமந்து பிழைத்தலிற்
       பொருளுண்டு! புகழுண்டு!
       பொய் கிழிக்கும்,
விற்சுமந்த தோள் எங்கே?
       வீறுடைய வாள்எங்கே?
       விளைந்த நன்செய்,
நெற்சுமந்த வளநாட்டில்
       நெடுந்துயரம் சுமக்கின்றோம்!
       நீதி எங்கே?

தாள்வணங்கிக் கிடக்கின்றார்
       வடவர்க்குத் தமிழரெனும்
       தாழ்வு போக்கி,
வாள்வணங்க வாழ்கின்றார்
       வறுமைதனைப் போழ்கின்றார் 
       வருங்காலப் பொன்-
னாள்வணங்கச் செல்கின்றார்
       நலிவெல்லாம் கொல்கின்றார்
       நன்மை கூர!
ஆள்வணங்கும் அரசுற்றார்!
       அறம் போற்றும் முரசுற்றார்!!
       என்றே ஆர்ப்போம்!