பக்கம் எண் :

114தமிழ்ஒளி கவிதைகள்2

சொல்லும் பிலாயில்
உருகும் இரும்புக்குச்
‘சோவியத்’ என்று பெயர் - அதோ,
சோவியத் பெண்டிர்கள்
சூடும் மலர்ப்பெயர்
‘இந்தியா’ என்று சொல்வேன்!
அல்லும் பகலும்நம்
ஆசைக் கனவுகள்
யாண்டும் மலர்வன காண்!
ஆன்ற இவ்வைய
இருளை அகற்றிநம்
அன்பு புலர்வதுகாண்!

அன்பென்ற நல்ல
சரக்கை யுடையவர்
ஆகிய வாணிகர் நாம்! - பேர்
ஆனந்த மாகிய
நட்புற வென்கின்ற
சந்தையை நாம் அடைந்தோம்!
வம்பு, வழிப்பறி
வட்டிக் கணக்குகள்
வந்து நமை அணுகா! - “இதோ,
வாழிய தோழமை!”
என்று பல்லாயிரம்
வாய்கள் முழக்கமிடும்!

‘சோவியத் நாடு’ - 1965