|
இந்தியப் பெருமை காப்போம்!
கண்விழித் திருந்து நாளும்
காவலைச் செய்து வந்த
புண்ணிய! மறைந்து போனாய்
பூதலம் நடுக்குற் றேங்க!
எண்ணிலார் கண்ணீர் சிந்த
இந்தியா மனம் வருந்தக்
கண்ணிலான் காலன் வந்து
கவர்ந்தனன் உன்றன் ஆவி!
போர்வந்து கதவைத் தட்டும்
போழ்தினில் மரணம் என்ற
தேர்வந்தே உன்னை யேற்றிச்
சென்றது வைய மக்கள்
ஆர்வந்தார் என்று பார்த்தார்
அன்னவர் அறம்என் கின்ற
பேர்உரு மறையக் கண்டார்,
பெருந்துயர் நெஞ்சிற் கொண்டார்!
நீயிலா இந்தி யாநன்
னீரிலா நிலத்தைப் போலாம்!
தாயிலாப் பிள்ளை போன்று
தவிக்கின்ற எம்மை நீங்கிக்
கோயிலாம் வானிற் சென்றாய்!
கோபுரம் இமய உச்சி
வாயிலாய் விளங்கக் கண்டோம்
வான்பிறை உன்சி ரிப்பாம்!
‘கலைமகள்’ - 1964
|