உழுபவனே நிலத்திற்குச் சொந்தக் காரன்!
உழைப்பவனே தேசத்தின் உரிமை யாளன்!
புழுவைப்போல் கிடந்ததுவும் பிச்சை வாங்கும்
புன்மைநிலை அடைந்ததுவும் வாடைக் காற்றில்
அழுதுதுயர் அடைந்ததுவும் இனிமே லில்லை!
அடங்காத வேகமொடும் ஆர்வத் தோடும்
எழுந்துவா! உழைப்பவரின் போராட்டத்தில்
இரண்டின்றிக் கலந்துவிட இதுதான் நேரம்!
மாளிகையில் வாழ்ந்தவரைக் கீழே தள்ளு!
மண்குடிசை தனில் வாழ்ந்த மனிதா! உன்னை
ஏளனமாய் இதுவரையில் நடத்தி வந்த
எதிரிகளைப் பணக்கார நரிக்கூட் டத்தை
தேளனைய முதலாளித் திருடர் தம்மைச்
சிரங்கொய்து கர்ஜித்து முரசு கொட்டி
“ஆளவந்தோம் உலகத்தை ஏழை மக்கள்
அடிபணியோம்” எனச்சொல்லிக் கொடிஉ யர்த்து!
‘தனி நூலிலிருந்து’ - 1948
|