‘கவனிப்போம்’ எனச்சொல்லி அரசாங் கத்தார்
கதவடைத்து வழிமூடி அதிகா ரத்தின்
சுவர்நிறுத்தி அதன்மேலே சிவப்புத் தொப்பி
சூரர்களை ஏற்றிவைத்து வரிசை யாக
நவநவமாய்த் துப்பாக்கித் தோட்டாக் குண்டு
ராணுவத்தின் படைவரிசை யாவுந் தந்து
பவனிவரப் பட்டாளம் ஆணை யிட்டார்
பத்திரிகை முதலாளி உதவி பெற்றார்!
பிரச்சார யந்திரத்தை முடுக்கி விட்டார்,
பேர்போன காங்கிரசின் பலத்தைக் கொண்டு
சரசரென நடவடிக்கை எடுப்போம் என்றார்!
தண்டனைகள் கொடுத்திடுவோம் என்று சொன்னார்
பெருகிவரும் பசித்தீமுன் அதிகா ரத்துப்
பேச்சென்னும் உலர்சருகு நிற்ப துண்டோ?
ஒரு முகமாய்த் தொழிலாளர் - தமது வாழ்க்கை
உரிமைபெற வேலையினை நிறுத்தஞ் செய்தார்!
ஒடிந்துவிழும் மரமென்ன அவர்கள் அங்கம்
ஓய்ந்து விடும் நேரத்தில் வேலை செய்ய
முடியுமென நினைக்கின்ற புத்தி சாலி
முத்தண்ணா யார்? என்றால் “தேச பக்தன்”
வெடிகுண்டின் அகிம்சையிலே சிந்தை வைத்து
விரதத்தை நோற்றுவரும் முதல மைச்சர்
கொடிதூக்கி அசோகரின் சக்கரத்தைக்
குண்டுகளின் வடிவத்தில் காட்ட லானார்!
“தூண்டிவிட்டார் செஞ்சட்டைக் காரர்” என்று
சுடுசொல்லை வீசினார்! வடக்கில் வாழும்
ஆண்டவனாம் பழனியின்பால் அருளைப் பெற்றார்?
அகிம்சைக்குத் ‘தென்னாட்டுக் காந்தி’ போன்றார்
பூண்டோடு ஒழித்திடுவேன் என்று சொல்லிப்
போலீசைக் கூப்பிட்டு மருந்து தந்து
‘வேண்டாத பையல்களை வேட்டுத் தீர்ப்பீர்
வேலையினை நிறுத்திவிட விடாதீர் என்றார்!
|