இத்தனையும் பொதுமக்கள் காணுங் காட்சி
எங்கெங்கோ ஊர்க்கப்பால் ஒதுக்கி டத்தில்
செத்த பிணம் சுடுகின்ற சுடுகாட் டோரம்
சீறிவரும் கொசுநிறைந்த கழிநீர் ஓடி
நித்தியமும் பாய்கின்ற சதுப்புக் காட்டில்
நிறையிருட்டுக் குடிசையிலே சாக்கு மூடி
வைத்திருக்கும் கூரையின் கீழ்செத்துக் கொண்டு
வாழ்கின்றார் நகரத்தைச் சுத்தி செய்வோர்!
பரிதாபம், இதைக்காண யாரு மில்லை!
பட்டங்கள் பெற்றவரும் சட்ட மன்றில்
துரிதமுடன் வாதாடும் சீமான் மாரும்
சுதந்திரத்தைக் கதருடையால் காட்டு கின்ற
பெரியவரும், தேசத்தின் பக்தி பேசும்
பிரபுக்கள் அமைச்சர்களும் சொல்லு கின்றார்;
மரியாதை இல்லாமல் தோட்டிப் பையல்
“மமதையால் துள்ளுகின்றான்” என்கின் றார்கள்!
சாயாத ஜமீன்தார் இனாம்தார் எல்லாம்
தடிதூக்கிக் குண்டர்கள்போல் துள்ளு கின்றார்!
நோயாலே விவசாயி வாடும் போது
நொறுக்குகிறார் முதுகெலும்பை! இவர்கள் தீங்கை
வாயாலே கூறிடவும் முடிவ தில்லை
மமதையால் துள்ளுபவர் துள்ளும் போது
ஓயாமல் உழைக்கின்ற ஏழை தன்னை
உருட்டுகிறார் மந்திரிமார் மிரட்டு கின்றார்!
கடைசிவரை நிலைசொல்லி முறையிட் டார்கள்!
கடும்உழைப்பு! சம்பளமோ கடுகைப் போலே
மடைதிறந்த வெள்ளமெனச் சாவை நோக்கி
மனைவிமக்கள் வீழ்கின்றார்! பிழைக்க வேண்டின்
முடைநீங்கும் அளவேனும் வாழ்க்கைக் கேற்ற
முறையினிலே கூலிதர வேண்டு மென்று
நடையாக நடந்து சென்று கேட்டுப் பார்த்தார்
‘நா’சலிக்க வாய்நோகச் சொல்லிப் பார்த்தார்!
|