பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 31

“உமைத்தூண்டி விட்டவரைச் சொல்லா விட்டால் 
       ஒழித்திடுவோம், துப்பாக்கிச் சனிய னாலே
இமைநடுங்க விழிநடுங்கக் குத்திச் சாய்ப்போம்!” 
       என்றுஜு ர வேகத்தில் கேட்க லானார்
‘சுமையாகிப் பூமியிலே பிறந்து விட்ட 
       சூரர்களே, எமைத்தூண்டி விட்டோர் இங்கே
எமதருகில் இருக்கின்றார்’ ‘என்றார் பெண்கள்! 
       எழுந்தனராம் செந்தலையர் கும்ப லாக,

“காட்டுங்கள் முரடர்களை உம்மைத் தூண்டும் 
       காலிகளைக் காட்டுங்கள்! கணவன் மாரை
வீட்டுக்கு அனுப்புகிறோம்! ஒன்றும் செய்யோம், 
       விட்டிடுவோம்!” எனச்சொல்லிக் கொக்க ரித்தார்
பாட்டுக்கு மழலை தருங் கிளியைப் போன்ற 
       பால்மணமும் மாறாத குழந்தை தன்னைக்
காட்டியொரு பெண்சொன்னாள்; இவன்தான் இந்தக் 
       கலகத்தைத் தூண்டியுமே விட்டான்’ என்றே!

கோபத்தில் சிரிப்புவர மற்ற பெண்கள் 
       ‘கொல்’ லென்று நகைத்தார்கள் ‘ஆமாம்எங்கள்
கோபத்தைத் தூண்டியது பால்இல் லாமல் 
       குமுறியழும் குழந்தைகளின் குரலே’ என்றார்!
தீபமென ஒளிவீசும் புன்சி ரிப்பு 
       தீய்ந்துவிழப் பிள்ளைகளை வாட்டு கின்ற
ஆபத்தை எதிர்க்காமல் இருக்க மாட்டோம் 
       அநியாயப் பட்டினியால் சாக மாட்டோம்?

பட்டினியால் எங்கள்உடல் வரண்ட தாலே 
       பால்வற்றிப் போயிற்று! குழந்தை கட்கும்
ஒட்டியது சிறுவயிறு! மிருகம் போலே 
       உளமிரங்கா மூர்க்கர்களே, நாங்கள் கையைக் 
கட்டிக் கொண் டிருப்போமோ? எம்மைத் தூண்டும் 
       காரணங்கள் இவையன்றோ? தொழிலாளர் பால்
மட்டற்ற கருணையுடைத் தொண்டர் தம்மை 
       மமதையால் கொடுமை செய்யத்துள்ளு கின்றீர்!