பக்கம் எண் :

32தமிழ்ஒளி கவிதைகள்2

தொழிலாளர் சங்கத்தில் உழைப்போர் தம்மைத் 
       துயர்தீர்க்கப் பாடுபடும் வீரர் தம்மை
அழித்துவிட எண்ணாதீர்! ஹிட்லர் போலே 
       அழிந்திடுவீர்; எங்கள்சிறு குழந்தை தன்னை
விழிமுன்னே நிறுத்துகிறோம் ‘தூண்டி விட்டோர் 
       வேறில்லை கண்டிடுவீர்’ என்று சொல்லித்
தொழிலாளர்ப் பெண்களெல்லாம் முழக்க மிட்டார் 
       தொடைநடுங்கிச் செந்தலையர் விழிக்க லானார்!

துப்பாக்கிப் படை நாய்கள் இருக்கு தென்ற 
       துணிவாலே கொடுமைகளை இழைக்க வேண்டாம்
எப்போதும் ஆபத்து தெரிந்து கொள்வீர்! 
       ஏதேதோ அநியாய வழிகள் தம்மில்
தப்பாகப் பணமெல்லாம் செலவ ழித்து 
       டாம்பீகம் அடிக்கின்றீர்! தொழிலா ளர்கள்
உப்புக்கும் வகையின்றி வாடு கின்றார் 
       உபதேசஞ் செய்கின்றீர் அவர்க்கு நீங்கள்!

நடப்பதெல்லாம் நடக்கட்டும்! ‘சரித்தி ரத்தை 
       நடைமுறையில் மாற்றுபவர் உழைப்போர்’ என்னும்
திடமான உண்மையினை அறிவ தற்குச் 
       செல்லாது பலகாலம்! சிறைக்கூ டங்கள்
உடைபடவும், மணிமுடிகள் உருண்டு வீழ்ந்தே 
       உதைபடவும் புதைபடவும் செய்த கூட்டம்
படைக்கஞ்சி வாழுமென நினைத்தி டாதீர் 
       பட்டணத்து மந்திரிகாள் கெட்டி டாதீர்!

தொழிலாளர் உரிமையினைத் தகர்ப்ப தற்கும் 
       சுதந்திரத்தை ஒற்றுமையை உடைப்ப தற்கும்
இழிவான செயல்செய்து கருங்கா லிக்கு 
       எலும்பிட்டு நாய்போலே வேலை வாங்கி
அழிவுவழி நடந்துசெல எண்ணி டாதீர் 
       அலையலையாய் எழுகின்ற முழக்கம் கேட்பீர்!
“ஒழிக முதலாளி” எனப் புரட்சி வீரர் 
       உலகமெங்கும் பொங்கியெழும் காட்சி காணீர்!

‘தனி நூலிலிருந்து’ - 1948