பக்கம் எண் :

44தமிழ்ஒளி கவிதைகள்2

மழை பெய்து முப்போகம் விளைந்த போதே
மனமறிய ஒருவேளை அரைச் சாப்பாடு!
தழை தீய்ந்து தண்ணீரும் வற்றி மண்ணின்
சதை வெடிக்கும் நேரத்தில் யாது கிட்டும்?

பிறந்ததோர் ஊர்விட்டுக் கிளம்பி விட்டான்
பிறந்து விட்ட குற்றத்தைப் பலநாள் எண்ணி
இறந்திறந்து பிழைத்து வரும் உழவன் ஏழை!
இறுதிவழி நடந்திட்டான் நிராசையோடு

கூன்விழுந்த உடல் கண்டார் கிழவன் என்பார்
கோல் ஊன்றித் தள்ளாடி நடந்து சென்றான்
வான்வரையில் தலைமுட்ட நிமிர்ந்து சென்ற
மகாராசர் காற்புழுதி அவனை, மூடும்!

சென்று விட்ட நாட்களெலாம் நினைவில் தோன்றும்
திருமனைவி இறந்தவுடன் தனையுந்தள்ளிக்
கொன்றுவிட முடியாத கடவுள் என்னும்
குருடனைத்தன் விழிமுன்னே கொண்டு வந்தான்!

எதற்காக எனைப் படைத்து வாழ வைத்தாய்?
ஏர் பிடித்தே உழுந்தொழிலை எனக்கேன் தந்தாய்?
எதற்காகப் பஞ்சத்தைச் சிருஷ்டி செய்தாய்?
என்னுயிரை எதற்காகத் துடிக்க வைத்தாய்?

அவன் கேள்வி அத்தனையும் நியாயம் என்றே 
ஆண்டவனும் கண்திறந்து பார்த்துவிட்டான்
சவம் போன்று கிடந்திட்ட கண்மாய் தன்னில்
சார்கின்ற ஆவியென வெள்ளம்பாயும்!

மழைகொட்டி மண்ணெல்லாம் குளிரலாச்சு;
வயலெல்லாம் மறுபடியும் விளையலாச்சு;
பிழைசெய்த நிலப்பிரபு, மீண்டும் நெல்லை
பேராசை மரக்காலால் அளக்க வந்தார்!