பக்கம் எண் :

56தமிழ்ஒளி கவிதைகள்2

கைகளைக் காட்டிவிடு - ரத்தக் 
       கறைகள் படிந்ததும் ஏன்!
பொய்கொள வாழ்ந்தவனே - நெஞ்சில் 
       பூட்டிய வஞ்சகம் ஏன்?

நாவில் புழுத்துருளும் - பாப 
       நஞ்செனும் சொற்களுடன்
கூவித்திரிவதும் ஏன்? - கொலை 
       கொள்ளையைத் தூண்டிடவோ?

குழந்தைகள் தூங்குகிறார் - உன்றன் 
       கூச்சல் நிறுத்திவிடு!
பழகிடும் அன்னையின் கை - தர்மம் 
       பாலிக்கும் நேரமிது!

சென்றிட்ட யுத்தத்திலே - அவள் 
       செல்வமகன் தனையே
கொன்றிட்ட பாதகனே - உன்றன் 
       கூக்குரல் நின்றிடட்டும்!

யுத்தம் தொடுத்திடவே - வெறி 
       யூட்டிய பாதகனே!
கொத்திடும் பேய்க்கழுகே - கொடுங் 
       கூக்குரல் நின்றிடட்டும்!

ஊரும் உறங்குதடா - சுவை 
       யூட்டும் அமைதியிலே
போருக்கெவர் வருவார்? - நீ 
       போய்விடு சாவுலகம்!

ஆற்றுநீர் ஓடுதடா - குளிர் 
       ஆனந்தத் தென்றலிலே!
காற்றில் மிதக்கும்இசை - தனில் 
       காதல் மிதக்குதடா!