பக்கம் எண் :

68தமிழ்ஒளி கவிதைகள்2

புதுக்குரல்

எங்கும் புதுக்குரல் சங்க மிசைக்குது!
       எண்ணிய காரியம் மண்ணில் நடக்குது!
குப்பையில் கோபுர சிற்பம் முளைக்குது,
       கொத்தடி மைத்தொழில் செத்துக் கிடக்குது!

யுத்த வெறிக்குரல் செத்துப் பிறக்குது;
       உண்மைபலம் மக்கள் கையி லிருக்குது!
சொத்து, சுகம், சமம் ஆக நெருங்குது;
       தொல்லை யிருந்திடும் எல்லை சுருங்குது!

மேற்குப் பனிப்புயல் காய்ச்சல் விளைக்குது,
       மிஞ்சும் அணுகுண்டு நெஞ்சு கொதிக்குது!
தீர்க்க மருந்துகள் சேர்க்கும் சிறப்பொளி
       செங்கதிர் போலெழுந் தெங்கும் நிலைக்குது!

எதிரில் வரும்புது வாழ்வு திதிக்குது,
       ஏழை முகம்,வர வேற்க மினுக்குது!
கதிர்கள் அறுத்திடும் காலம் இதிற்,பலன்
       காண நமக்கொரு வாய்ப்பு மிருக்குது!

கந்தல் உடுத்திய கந்தன் மகிழ்கிறான்
       கண்ணை உயர்த்திஇவ் விண்ணை அளக்கிறான்
வெந்திடு வாழ்வினில் ஊற்றப் புதுமழை
       வேகம தாய்முகில் வந்து குவியுது!

நீலக் கடல்தொடு வானம் அனைத்தையும் 
       நெஞ்சு மகிழ்வுடன் கொஞ்சி அழைக்குது!
கோல மழித்திடும் யுத்தமெனிற், சினம்
       கொண்டு சமாதானத் தொண்டு நினைக்குது!

நித்திரை யிற்புது நேயக் கனவுகள்
       நீண்டு மகிழ்ச்சியைத் தூண்டி எழுப்பின
சத்திய தேவதை நர்த்தன மிட்டனள்
       சர்வ தேசிய சங்கீதம் ஒலிக்கவே!

‘தமிழ்முரசு’ - 1949