பக்கம் எண் :

கவிஞர் தமிழ்ஒளி 75

நாட்டில் ஒரு கவளம் நல்லுணவு கிட்டாமல்
காட்டில் இலைகுலையைக் காய்ந்த சருகையெல்லாம்
சென்றுதின்னும் செந்தமிழர் சிந்தை கொதித்திடவே
‘குன்று’ மேல் நின்று கொலைக்கழுகு கொக்கரிக்கும்!

ஆடாமல் சற்றும் அசையாமல் நீயிருக்க,
மாடாக எம்குடும்பம் மண்ணாக யாமுழைக்க
மேடாக உன்வாழ்க்கை மேலாக ஓங்கியபின்
ஓடாக எம்மை உருட்டிவிடக் கூவுகின்ற 
வெள்ளைக் கழுகே! விழிப்படைந்தோம்! நீயிட்ட
கொள்ளைப் பொருள்பறிக்கக் கொட்டுகின்றோம் போர்முரசு!
‘வெள்ளையனை ஓட்டும் விரதம் படைத்தீர்!
கொள்ளையிடும் இந்தக் கொடியன் எவன்? என்பீர்!

வெள்ளையனை ஓடவைத்த வீரம்’ ‘புரூக்சு’க்குப்
பிள்ளையாய்ப், போலீஸ் பெரும்படையை மாற்றிற்றோ!
காமன்வெல்த் ஒப்பந்தம் கைகுலுக்கி நிற்கிறதோ?
மாமன் மகனாக மந்திரியார் பார்த்தாரோ!
என்ன உறவுடையான் இங்கே பறங்கிமகன்?
கன்னமிட்ட கள்வனோடு கைகுலுக்கி நின்றீரே! 

காற்றில் நெருப்பாய்க் கடலில் அலைப்பெருக்காய்
ஆற்றிற் புனலாய் அலைபொங்கும் போராட்டம்!
பாய்கின்ற நேரமிது! பட்டத்து ராசர்முடி
சாய்கின்ற நேரமிது! சங்கம் ஒலிப்பதுகேள்!

‘கள்ளன் பறங்கி தனைக் காவல் கடுஞ்சிறையில்
தள்ளுங்கள்’ என்றெழுந்து தாவுகின்ற போராட்டம்!

வெள்ளை வெறியர்தமை வெஞ்சிறையில் மாட்டாமல்
கள்ளமற்ற தோழருக்குக் கைவிலங்கு போட்டீரே!
நேரிட்ட உண்மை நிறைகாணக் கண்ணின்றி
யாரிட்ட கட்டளையால் யாரைச் சிறையிட்டீர்?
கங்குல் கிழித்துக் கதிரெழுந்த நேரத்துப்
பொங்கு கடலென்னப் போரலையாய்ப் பாய்கின்ற 
பாட்டாளி வர்க்கப் படை திரண்டால், மின்னலிடும்
ஈட்டிமுனை, துப்பாக்கி எல்லாம் எதிர்த்திடுமோ?