பக்கம் எண் :

76தமிழ்ஒளி கவிதைகள்2

சாகரமும் பொங்கிவந்து தாக்கினால் இக்கரையை
வேகப்புயல் கொண்டால் வீழ்ந்தொழித்தல் எந்நேரம்?
குன்றும் எதிர்நின்ற கொத்தளமும் கோட்டைகளும்
பொன்றும், நொறுங்கும், புழுதியொடு தஞ்சமுறும்!

தோட்டமொடு தங்கச் சுரங்கங்கள் பக்கமெலாம்
கேட்டார் கிளர்ந்தெழுந்து கேட்கின்ற போர்முரசு!

போர்முரசு கேட்கப் புறப்பட்டார் செந்தமிழர்!
‘யார் சொத்து? நாங்கள் அளித்தநிதி?” என்றிட்டார்!

வெள்ளையர்கள் இங்குற்று வெட்டினரோ, கட்டினரோ?
கொள்ளையிட்ட சொத்தெல்லாம் கொண்டுசெல்லல் எவ்வாறு?

எத்தனைநாள் நம்முரிமை இவ்வாறு போயிற்று?
சொத்தைப் பறித்துச் சுகம்தேட வாரீரோ!
நாட்டுரிமை வீட்டுரிமைநம் சொத்துரிமை யெல்லாம்
வேட்டுவைத்த வெள்ளையரை, வேட்டுவைக்க வந்திடுக!

கார்கடலின் மீது கதிர்எழுந்து நிற்பதுபோல்
போர்க்கொடியை ஏந்திப் புறப்படுக செந்தமிழர்!

‘தேசபக்தன்’ - 1953

குறிப்பு: ‘மெட்ராஸ் எலக்டரிக் ட்ராம்வே’ கம்பெனி வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது எழுதப்பட்டது!