கோவாவில் கொடுமை!
சுதந்தரக் கொடி
பறந்திடும் எனில்
சுட்டு மடிக்கின்றார்! - அன்னியர்
சுட்டு மடிக்கின்றார்!
இதந்தரும் மனை
மக்கள் துடித்தழ
எம்முயிர் வேகிறது! - தோழர்
தம்முயிர் போகிறது!
வந்த பிரஞ்சியர்
ஆங்கிலர் ஓடினர்
வழிதடு மாறிடவே - இரு
விழிதடு மாறிடவே!
வெந்த மனத்திடை
வெள்ளையர் இன்னமும் -
வீசுவதோ தழலை - நாம்
பேசுவதோ மழலை?
எத்தனை ஆண்டுகள்
ரத்தம் சொறிந்தபின்
இவ்விடுதலை பெற்றோம்? - நாம்
இவ்விடுதலை பெற்றோம்?
பித்தர் இருந்தினி
நம்மை அடக்கிடும்
பீழை பொறுத்திடவோ? - இதை
ஏழை பொறுத்திடவோ?
இந்திய மண்ணில்
இருந்திடு ‘கோவா’
எத்தனை நாள் அடிமை? - இன்னும்
எத்தனை நாள் அடிமை?
|