அந்நியக் கொடுவிலங்கை
ஆசியா முறித்தெறிந்து
செந்நிறக் கொடியெடுத்த
சீர்த்தியும் - உன்
கீர்த்தியும்,
நம் இதயத் துள்எழுந்த
நாதமாய் எதிரொலிக்க
வெம்மனப் பகைவர்நெஞ்சு
வேகவே - அவர்
சாகவே,
செத்து விழும் பேய்க்கழுகு
சீறிநம் இணைக்கரத்தைக்
குத்துகின்ற போதும்நாம்
குலைவுறோம் - உளம்
மலைவுறோம்!
நச்சரவு போற்பகைஞன்
நட்புறவு தான்கெடுக்க
சச்சரவு மூட்டினான்
தகைக்கவே - நாம்
பகைக்கவே!
ஒன்றிணையும் நம்உளத்தை
ஊழியே எதிர்த்த போதும்
வென்றிணையும் என்றசொல்
விரிந்ததே - கண்
தெரிந்ததே!
நாசியை அடுத்துநின்ற
நல்விழிகள் ‘நாம்’ - இருவர்
ஆசியா எனும் முகத்தில்
மின்னுவோம் - புகழ்
மன்னுவோம்!
‘ஜனசக்தி’ - 1959
|