பக்கம் எண் :

92தமிழ்ஒளி கவிதைகள்2

நிலவைப் பிடித்துவிட்டார் - அதன்
நெற்றியில் வெற்றிக் கொடியைநட்டார்!
உலவவிண் செல்வதற்கே - இவ்
வுலகை அழைக்கின்ற விந்தைதொட்டார்

காதலர் பார்த்தநிலா - புவி
கற்பனை யாவையும் சேர்த்தநிலா!
மோது கடல்அலையைத் - தன்
மோக வெளிச்சத்தால் ஈர்த்தநிலா!

பாம்பு விழுங்கு மென்றே - பழம்
பஞ்சாங்கக் காரர் பகர்ந்தநிலா!
தீம்பிழி நறவம்என - ஒளி
சிந்தித் திகழ்கின்ற வட்டநிலா

மண்ணவர் கைகளிலே - ஒரு
மாய விளக்கென மாற்றமுறப்
பண்ணினர் உருசியரே - இப்
பாரில் அவர்க்கினி யார்நிகரே!

‘ஜனசக்தி’ - 1959

குறிப்பு: 1959 ம் ஆண்டு சோவியத் ருஷ்யா - ‘ஸ்புட்னிக்’ என்ற
விண்கலத்தை வானில் செலுத்தி, சந்திரனில் செங்கொடியைப் பதித்த
சிறப்பினைக் கூறும் பாடல்.