(வேறு)
அன்று தொட்டிருள்
வீழ்ந்து விட்டதும்,
அகில நங்கைதன்
துன்பம் கெட்டதும்,
தொன்று தொட்டுறை
நோய்கள் பட்டதும்
தோன்று செங்கொடி
எங்கும் நட்டதும்,
இன்று திங்களைச்
சென்று தொட்டதும்,
இசைபெறும் இலெனின்
கண்எனச் சுடர்
நின்றெறிந் திடும்
நீள் விளக்கமாம்
நிகர்அரும் பொது
வுடைமை ஆற்றலால்!
(வேறு)
மாமுனிவன் மார்க்சுடனே
ஏங்கல்ஸ் என்ற
மாண்புமிகு அறிஞனுமே
கனவு கண்டார்!
ஊமைகளாய் வாய்திறந்தே
உரைத்தல் இன்றி
உளங்குமுற வேட்கைமிகக்
கனவே உற்றார்!
ஆமைகளாய் அடிமைகளாய்
வாழ்ந்த மாந்தர்!
அவர் கனவும் நனவாகி
அதற்கு மேலும்
தீமை யெலாம் அடிசாய்ந்த
சுவர்க்க மாகித்
திகழ்ந்ததுநல் உருசியரின்
ஜென்ம பூமி!
|