பக்கம் எண் :

மலரும் உள்ளம்105

ஒளவை

ஒளவைப் பாட்டி நல்ல பாட்டி - நமக்(கு)
   ஆத்தி சூடி தந்த பாட்டி.
செவ்வை யாக நாமெல் லோரும் - வாழச்
   சிறந்த வழி காட்டும் பாட்டி.

மன்னர் மரி யாதை செய்ய - நாட்டு
   மக்கள் போற்றி வந்த பாட்டி.
என்ன செல்வம் வந்த போதும் - அதை
   ஏழை கையில் தந்த பாட்டி.

எந்த ஊரும் சொந்த ஊரே - என
   எங்கும் சுற்றி வந்த பாட்டி.
சொந்த நலன் ஏதும் இன்றி - தமிழ்த்
   தொண்டு செய்தே வாழ்ந்த பாட்டி.