பிறப்பினால் உயர்வு தாழ்வைப்
பிறப்பிக்கும் கூட்டத்தாரைத்
திருத்தவே ஐயன் செய்த
தியாகமே அன்பைக் காட்டும்.
திருக்குறள் அறத்துப் பாலின்
திருவுரு இவர்தாம் என்றே
ஒருமுறை யல்ல; இங்குப்
பலமுறை உரைக்கின் றேனே!
அரசியல் கோட்டைக் குள்ளே
அன்பினால் புரட்சி செய்தார்.
உரியவ ரிடத்தே நாட்டை
ஒப்படைத் திடவே செய்த
திறனதை அறிந்து மற்றத்
தேசத்தார் போற்று கின்றார்.
அறநிலை தவறா ஐயன்
அன்பினை என்னென் பேனே!
அன்புதான் கடவுளென்றே
அனுதினம் உணர்த்தி வந்தார்.
அன்புதான் பகைமைத் தீயை
அணைத்திடும் வெள்ள மென்றார்.
|