தீபாவளி
இந்த நாளை நாமெலாம்
இன்ப மாகப் போற்றுவோம்.
எந்த நாளும் இப்படி
இருக்க வழிகள் தேடுவோம்.
அசுரன் அழிந்த நாளென
ஆடிப் பாடி மகிழுவோம்.
அசுரத் தனங்கள் யாவையும்
அழிக்க நாமும் முயலுவோம்.
ஆடை புதிதாய் உடுத்தியே
ஆனந் தத்தில் மூழ்குவோம்.
வாடும் ஏழை, உடையுடன்
வாழும் வகையைக் காணுவோம்.
வெடிகள் தம்மை இன்றுநாம்
வீரர் போலக் கொளுத்துவோம்.
கொடிய எண்ணம் யாவையும்
கொளுத்தி வீரம் காட்டுவோம்.
|