தென்பால் குமரி வடபால் இமயம்
கிழக்கிலும் மேற்கிலும் கடலாய்க் கிடந்த
பெருநிலத்தின் பெயரென்ன அத்தான்?
நாவலந் தீவென நவிலுவார் கண்ணே!
தீவின் நடுவில் நாவல் மரங்கள்
இருந்ததால் அப்பெயர் இட்டனர் முன்னோர்.
செவ்விதழ் மாணிக்கம் சிந்தும் செல்வியே
எவ்வினத் தார்க்கும் இப்பெயர் இனிக்கும்
நாவல் நறுங்கனி யாருக்குக் கசக்கும்?
பழைய நம் தீவில் மொழி, இனம்பல உள.
மொழியினின்று கல்வி முளைத்தது
கல்வி இந்நாட்டில் கணக்காயர்களைக்
கலைஞரை, கவிஞரைத், தலைவரைப், புலவரை
விஞ்ஞானிகளை விளைத்தது-ஆயினும்
கற்றவர், கல்லாரிடத்தும் கல்வியைப்
பரப்ப முயலவில்லை பாழிருள்
விட்டு மீண்டவர் பிறரை மீட்கிலர்.
கற்றவர் சிலர், கல்லாதவர் பலர்.
என்னும் இழிவு நாட்டில் இருக்கலாம்
என்பது கற்றவர் எண்ணம் போலும்
எல்லாரும் இந்த நாட்டில் கற்றவர்)
எனும் நிலை இயற்றுதல் கற்றவர் பொறுப்பே!
என்ன அத்தான், நீங்கள் இப்படிக்
கற்றாரை எல்லாம் கடிந்து கொள்கின்றீர்?
கற்றாரைத் திட்டவில்லை, கல்வி
அற்றார்க்கு இரக்கம் காட்டினேன் அன்பே!
கல்வி இருட்டிற்குக் கலங்கரை விளக்கு.
யாவர்க்கும் வாக்குரிமை இருக்குமிந் நாட்டில்
யாவர்க்கும் கல்வி இருக்கவேண்டும்.
கண்ணிலார் எண்ணிலார் என்பது கண்டும்
கண்ணுளார் கண்ணிலார் போல் இருப்பதா!
கல்லா வறியார்க்குக் கைப்பொருள் கல்வியே!
இல்லை என்பது கல்வி இல்லாமையே!
உடையவர் என்பவர் கல்வி உடையரே! நாட்டின் மக்கள் நாட்டின் உறுப்பினர்
உறுப்பினர் நிறுவனம் உடையவர் ஆவார்
சிலர் படித்தவர் பலர் படியாதவர்
என்ற வேற்றுமை ஏன் வரவேண்டும்?
ஆட்சி வேலை அதிக மிருக்கையில்
நாட்டிற் கட்டாயக் கல்வி, நாளைக்கு
ஆகட்டும் என்பவர் மக்கள் இன்று
சாகட்டும் என்று சாற்றுகின் றவரே!
எந்நாளுமே நான் எண்ணுவது இதுதான்;
இந்த நாட்டில் யாவரும் படித்தவர்
என்னும் நன்னிலை ஏற்படுவதெந்நாள்?
நாவலந் தீவில் மதங்கள் நனிபல!
கடவுளே வந்து மதம்பல கழிறினார்
கடவுளின் தூதரும் கழறினார் மதங்கள்
கடவுளிற் கொஞ்சம் மனிதரிற் கொஞ்சமும்
கலந்த ஒருவரும் ஒருமதம் கழறினார்
கடவுளை நேரிற் கண்டவர் சொன்னார்
கேள்விப் பட்டவரும் கிளத்தினார்.
ஒருவர் "கடவுள் ஒருவர என்பார்.
ஒருவர் 'கடவுள் மூவர்' என்பார்.
ஒருவர் 'கடவுள் இல்லை' யென்றுரைப்பார்.
நாம் பெற்ற பேறு யார் பெற்றார்கள்
ஒரு மதம் தோன்றி அதன்கிளை ஒன்பதாய்த்
திருவருள் புரிந்த பெரியோரும் பலர்;
மதங்களைப் பலவாய் வகுக்க, அவற்றில்
விதம்பல சேர்த்த வித்தகரும்பலர்.
நாவலந் தீவில் மதங்கள் அனைத்தும்
இருக்கலாம் இன்னும் பெருக்கலாம் எனினும்
மதங்கள் வேறு மக்கள் வேறு
மதங்கள் மக்களின் மாற்றுச் சட்டைகள்
இந்நில மக்கள் அவ்வெழிற் சட்டையின்
உட்புறத் துள்ள மனிதரைக் காண்க.
அந்த மனிதர் இந்தப் பெருநிலம்
ஈன்ற பிள்ளைகள் என்னும் எண்ணம்
அறிந்து பயனிலை உணர்ந்தால் ஒற்றுமை
நிலைபெறும்; கலகம் அறவே நீங்கும்.
பன்மதம் சேர்ந்த பல்கோடி மக்களும்
நாங்கள் ஒன்றுபட்டோம் என்று நவின்றால்
மதங்களின் தலைவர் விரைந்து வந்து
பிரிந் திருங்கள் என்றா பிதற்றுவர்?
அவர்கள் அருள் உளம் கொண்டவர் அல்லரோ?
நாட்டியல் என்னும் நல்ல தங்கத்தேர்
நன்னிலை நண்ண வேண்டாமா? சொல்,
எல்லாரும் இந்நாட்டு மக்கள் என்றுணர்ந்தால்
செல்லரும் நிலைக்குச் செல்லல் இலேசு.
பல இனம் பல மொழிபற்றி ஓரு சில;-
பழம்பெரு நிலத்தில் பலமொழி பல இனம்
இருப்பதால், இஃதொரு பல்கலைக் கழகம்!
ஆனால், தேனாய்ப் பேசும் திருவே,
ஒரினத்துக் குள்ள மொழியைப்
பலஇனத் துள்ளும் பரப்ப முயல்வதால்
நாட்டில் ஒற்றுமை நண்ணும் என்ற
கோட்பாடு சரி என்று கொள்வதற் கில்லை.
அவ்வவ் வினத்தின் அவ்வம் மொழிகளைச்
செம்மை செய்து செழுமை யாக்கி
இனத்து மக்கள் எவர்க்கும் பரப்பும்
ஒன்றினால் நாட்டில் ஒற்றுமை ஏற்படும்
என்பதென் எண்ணம் கன்னல் சாறே! இனத்தைச் செய்தது மொழிதான், இனத்தின்
மனத்தைச் செய்தது மொழிதான், மனத்தை
மொழிப்பற்றி னின்று பிரிப்பது முயற்கொம்பு.
அன்னை மொழியையும் படி அதனோடு நான்
சொன்ன மொழியையும் படி எனும் சொற்கள்
கசக்குமே அலாது மக்கட்கு இனிக்குமோ?
ஆங்கிலன் தனக்குன் அடிமையை நோக்கி
ஆங்கிலம் படித்தால் அலுவல் கொடுப்பேன்
என்றான். நாட்டில் இலக்குமண சாமிகள்
தமிழ் மறந்து ஆங்கிலம் சார்ந்து தமிழைக்
காட்டிக் கொடுக்கவும் தலைப்பட்டார்கள்.
இந்த நிலத்தில் அடிமை இல்லை
ஆதலால் துரைகளும் இல்லை அல்லவா?
கைக்குறிகாரர் கணக்கிலர் வாழும்
இந்த நிலையில் அயல்மொழி ஏற்றல்
எவ்வாறு இயலும்? அமைதி என்னாகும்?
நானிங்கு நவின்ற திருத்தம் வைத்துப்
பாரடி நாவலந் தீவின் பரப்பை நீ
பிரிந்த பகுதி பிணைந்தது பாரடி
பிரிய நினைத்தவர் பிழை உணர்கின்றனர்
பெருநிலத்தில் ஒரே கொடி பறந்தது!
நாவலந் தீவினர் எல்லாரும் நல்லவர்
எல்லாரும் வீரர் எல்லாரும் கவிஞர்
இமையச் சாரலில் ஒருவன் இருமினான்
குமரி வாழ்வான் மருந்து கொண் டோடினான்
ஒருவர்க்கு வந்தது அனைவர்க்கும் என்ற
மனப்பாங்கு வளர்ந்தது வேண்டிய மட்டும்!
இமயம் மீட்கப் பட்டதிதோ பார்
சீனன் செந்நீர் கண்ணீராக
எங்கோ ஓட்டம் பிடிக்கின் றானடி!
விளைச்சற் குவியல் விண்ணை முட்டியது
தொழில் நலம் கண்டோம்-தேவை
முழுமை எய்திற்று-வாழ்க அழகிய தாய்நிலம் அன்பில் துவைந்தே!
|
( 65 )
( 70 )
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
( 100 )
( 105 )
( 110 )
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
( 165 )
( 170 )
( 175 )
( 180 )
( 185 )
|