பக்கம் எண் :

நினைவு வராதா?

நிலவு வராதா- எங்கும் உலவி வராதா!
நிலவு கண்டால் என்முகம் அவன் நினைப்பில் வராதா-
அவன் மறதி தீராதா!
மலர் விரியாதா-அங்கு மணம் பரவாதா!
மணம் நுகர்ந்தால் என்குழல் அவன் மனத்தைத்
தொடாதா-அவன் மறதி கெடாதா!
குயிலும் கொஞ்சாதா-அவன் செவியில் விழாதா!
குரலால் என் மொழி நினைவு கொஞ்சம் வராதா-காதற்
பஞ்சம் தீராதா!
வெயில் தழுவாதா-ஒளி இருள் கழுவாதா
வெயில் கண்டால் என் புருவம் விருப்பம் தராதா-காதற்
கரிப்புத் தீராதா!
மின்னல் வராதா-அவன் கண்ணில் படாதா!
மின்னல் கண்டால் என் இருப்பின் மென்மை நினைப்பான்
காதல் வெப்பந் தணிப்பான்!
கன்னல் ஓங்காதா-அங்குக் காட்சி தராதா!
கன்னல் கண்டால் என் உதட்டுக் கதை மறப்பானா?-
இங்கு வர மறுப்பானா?





( 5 )




( 10 )




( 15 )

நேயனை அழைத்து வா!

எனக்கிதுதான் நிலவா, சுடு நெருப்பா-அவன்
என்னைக் கூடி இருக்கையிலே அழகும் குளிரும் கலப்பா!
                         (எனக்கிதுதான் நிலவா!)

இனித்திருக்கும் பழமா இது பாலா-அவை
எட்டி என்றால் அவனில்லாத தாலா!
நினைத் தொழுதேன் உயிரிருக்கும் போதே-என்
நேயனைப் போய் அழைத்து வாடி மாதே
                         (எனக்கிதுதான் நிலவா!)

மணக்கும் முல்லைக் கொடியா பிணநெடியா-அவன்
வாராவிட்டால் இவை எல்லாம் இப்படியா ?
தணலில் போட்ட புழுவாய்த் துடித்தேனே-என்
தமிழவேளை அழைத்து வாடி மானே!
                         (எனக்கிதுதான் நிலவா!)


( 20 )





( 25 )





( 30 )

தவளை போல் குதிக்காதீர்!

அவளிப்படி நடந்தாளோ?
   அவளிப்படி விழித்தாளோ!
இவளிடத்தில் காட்டாதீர்!
   இவளிடத்தில் விழிக்காதீர்!
அவள் பூசிய கலவைதானோ?
   அவள் தந்த அடைகாயோ!
இவளிடத்தில் வீசாதீர்!
   இவளிடத்தில் சிரிக்காதீர்!

அவள் சூட்டிய மலர்தானோ?
   அவள் கடித்த கன்னப் புண்ணோ!
இவளிடத்தில் நீட்டாதீர்!
   இவள் மனத்தைக் கலக்காதீர்!
அவள் கொடுத்த தலைக் கொழுப்பா!
   அவள் கொடுத்த ஆணவமா?
இவளிடத்தில் செல்லாதே
   இவளை ஒன்றும் பண்ணாது!




( 35 )





( 40 )




( 45 )

அவளிடமே போவீரே!
அவளிடமே சாவீரே!
இவளிடத்தில் வரவேண்டாம்
இவள் தோளை நத்தாதீர்
எவளிடத்தில் எது செல்லும்?
அவளிடத்தில் அது செல்லும்
குவளை அத்தான் அவள் கண்கள்
குவளை நீரும் இங்கில்லை!

அவளிதழ்தான் இருக்குமங்கே
அவலுமில்லை மெல்லுதற்கே!
சவலை போகும் பிள்ளை இங்கே
தனிஇன்பக் கொள்ளை அங்கே
கவலை யெல்லாம் அவளிடத்தில்
கண்ணீர்தான் இவ்விடத்தில்
தவளை போலக் குதிக்காதீர்
தலைவாயில் மிதிக்காதீர்!


( 50 )




( 55 )





( 60 )


தீராதோ காதல் நோய்?

வாராத நாளெலாம் (நான்) வாழாதநாள்- அத்தான்
                         (வாராதா நாளெல்லாம்...)
வந்திட்டால் காண்பேனிங்கே சந்தனச் சோலையைத்தான்
                         (வாராதா நாளெல்லாம்...)
தீராத காதல்நோயை ஓர்நொடியில் தீர்த்திடுவான்
செந்தமிழில் பேசிப்பேசித் தேன்கவிதை சேர்த்திடுவான்
பாராத நாள்எல்லாம் பாழானநாள் அத்தானைப்
பார்க்கும் நாள் ஒவ்வொன்றும் தைப்பொங்கல் நாள்
                         (வாராத நாளெல்லாம்...)

உண்ணமனம் ஓடுமா (என்) கண்ணிமையும் மூடுமா ?
உண்டான தேன் வறண்டால் வண்டுதான் பாடுமா ?
எண்ணுவேன் என் மனந்தான் கண்ணாளனைத் தேடுமா
எண்ணாமல் இருப்பதற்கும் ஏந்திழையால் கூடுமா ?
                         (வாராத நாளெல்லாம்...)


( 65 )




( 70 )





( 75 )

முத்து மாமா!

புதுக்கோயில் மதில்மேலே முத்து மாமா-இரண்டு
புறாவந்து பாடுவதேன் முத்து மாமா?
எதுக்காகப் பாடினவோ முத்து மாமா-நாமும்
அதுக்காகப் பாடுவமே முத்து மாமா
ஒதுக்கிடுமா ஆற்று நீரைக் கடல் வெள்ளம்-என்னை
ஒதுக்கிவைக்க எண்ணலாமா முத்து மாமா?
முதல் மனைவி நானிருந்தும் முத்து மாமா-அந்த
மூளியை நீ எண்ணலாமா முத்து மாமா
ஒதிய மரத்தின் கீழே முத்து மாமா-கோழி
ஒன்றை ஒன்று பார்ப்பதென்ன முத்து மாமா?
எது செய்ய நினைத்தனவோ முத்து மாமா-நாமும்
அது செய்ய அட்டி என்ன முத்து மாமா.
குதி குதியாய்க் குதித்ததுண்டு முத்து மாமா-எனக்குக்
குழந்தையில்லை ஆனாலும் முத்து மாமா
எதிலும் எனக்கதிகாரம் முத்து மாமா-நீதான்
எப்போதுமே என் சொத்து முத்து மாமா!



( 80 )




( 85 )




( 90 )


சாவை நீக்கு

கண்டவுடன் காதல் கொண்டேன் உன்மேலே-நீ
கண்வைக்க வேணுமடி என்மேலே
அண்டினேன் ஆதரிக்கக் கையோடு-கேள்
அதுதானே தமிழர்களின் பண்பாடு!
கொண்ட மையல் தீர்ப்பதுன் பாரமே-எனைக்
கூட்டிக்கொள் உன் இடுப்பின் ஓரமே
நொண்டியின் கைம்மேல் வந்தா விழும்?-என்
நோய் தீர்க்கும் சேலத்து மாம்பழம்?

அருகில் ஆருமில்லை உன்னைப்போல்-உன்மேல்
அன்பு கொண்டவன் ஆருமில்லை என்னைப்போல்
இழைக்க இழைக்க மணம் கொடுக்கும் சந்தனம்-மனம்
இனிக்க இனிக்கப் பூப்பூக்கும் நந்தனம்!

பழுக்கப் பழுக்கச் சுவை கொடுக்கும் செவ்வாழை
பறிக்கும்போதே மணம் கொடுக்கும் வெண்தாழை
தழுவுமுன்னே இன்பந்தரும் பெண்ணாளே-என்
சாவை நீக்க வேண்டுமடி கண்ணாளே!


( 95 )




( 100 )





( 105 )



நீ எனக்கு வேண்டும்

வானுக்கு நிலவு வேண்டும்
வாழ்வுக்குப் புகழ் வேண்டும்
தேனுக்குப் பலாச்சுளை வேண்டும்-என்
செங்கரும்பே நீ எனக்கு வேண்டும்?

மீனுக்குப் பொய்கை வேண்டும்
வெற்றிக்கு வீரம் வேண்டும்
கானுக்கு வேங்கைப்புலி வேண்டும்-என்
கண்ணாட்டியே நீ எனக்கு வேண்டும்!

வாளுக்குக் கூர்மை வேண்டும்
வண்டுக்குத் தேன் வேண்டும்
தோளுக்குப் பூமாலை வேண்டும்-அடி
தோகையே நீ எனக்கு வேண்டும்!

நாளுக்குப் புதுமை வேண்டும்
நாட்டுக்கே உரிமை வேண்டும்
கேளுக்கே ஆதரவு வேண்டும் -அடி
கிள்ளையே நீ எனக்கு வேண்டும்!

( 110 )





( 115 )





( 120 )





( 125 )

இன்பம் அனைத்தும்

பெண்கள் இட்ட பிச்சைதான்-ஆண்கள்
பெற்ற இன்பம் அனைத்தும்-அழகிய     (பெண்கள் இட்ட பிச்சைதான்)
கண்ணைக் கவர்வார் எண்ணம் கவர்வார்
காதலால் இன்ப வாழ்வ ளித்திடும்       (பெண்கள் இட்ட பிச்சைதான்!)
அன்னை தாயை உடையார்-பணிவினில்
அடியவர் போன்றார்-மலர்ப்
பொன்னின் அழகுடையார் பொறுமையில்
பூமிக்கிணை ஆவார்




( 130 )



( 135 )

இன்பம் அளிப்பதில் தாசிகள்-அவர்
எண்ணம் அளிப்பதில் அமைச்சர்கள்-அழகிய (பெண்கள் இட்ட பிச்சைதான்!)
கண்ணின் கடைப் பார்வை-ஒரு சிறு

கட்டளை போட்டுவிட்டால்-இப்பெரு
மண்ணுலகின் ஆட்சி ஆண்கள்
வாங்குமோர் வாள் வீச்சு
பெண்களினால் பண்கள் இலக்கியம்-அவர்
பேச்சுக்குத்தான் பெயர் அமிழ்தம்-அழகிய (பெண்கள் இட்ட பிச்சைதான்!)





( 140 )



( 145 )

தொல்லை தீர்க்கலாம்

பாலும் தேனும் புளித்த காடி
பாடுது பார் வானம் பாடி
சோலையிலே நீயும் நானும் ஆடி-நம்
தொல்லையெல்லாம் தீர்த்திடலாம் வாடி!

ஆலமரம் கூடாரம்
அல்லிப்பூக் குளத்தோரம்
மாலைக்காலம் நமை அழைக்கும் நேரம் - இந்த
மாப்பிள்ளக்கு தோண்டி ஆதாரம்!

காதலுக்கு மஞ்சள் சிட்டுக்
காத்திருக்கும் வேலை விட்டு-அடி
மாதரசே பேசக் கூச்சப்பட்டு-நீ
வருந்தலாமா கீழே தலை தட்டு?






( 150 )




( 155 )


போதாதா நான் உனக்கு
பொன்தாண்டி நீ எனக்கு
காதோடு சொல்வாயுன் எண்ணம்-நீ
கட்டுப்பட்டால் இன்பவாழ்வு திண்ணம்!

பூ மணக்கும் உன் கொண்டை
பொன் குலுங்கும் கால்தண்டை
தீமை என்ன கண்டாய் என்னண்டை-வாய்
திறந்திட்டால் கெட்டாபோகும் தொண்டை!

மாமிக்குன் மேல் ஆசையுண்டு
மகனுக்கு நீ கற்கண்டு
நீ மேலும் மேலும் துவண்டு-போய்
நிற்பதென்ன சொல் ஆசை கொண்டு!


( 160 )





( 165 )



உன் எண்ணம் கூறு!

பாழாய்ப்போன என்மனம் ஒருநாய்க்குட்டி- அதைப்
பறித்துக் கொண்டாய் அடியே என் சின்னக்குட்டி
   உன் மேனி ஒரு பூத்தொட்டி
   உதடு தித்திக்கும் வெல்லக்கட்டி!

ஏழைக்கு வடித்து வைத்த சோறு-பணம்
இருப்ப வர்க்குச் சாத்துக்குடிச் சாறு
   
   பெருக் கெடுத்த தேனாறு
   பெண்ணே உன் எண்ணம் கூறு!

 காணக்காண ஆசை காட்டும் முத்துநிலா-நீ
 கடுகடுப்புக் காட்டுவதும் என் மட்டிலா

   வேரிலே பழுத்த பலா
   வேண்டும் போதும் தடங்கலா?

 வீணாகிப் போகலாமா நேரமே-என்னை
 விலக்கிவிட்டால் பழி உன்னைச் சேருமே

   பொறுத்தேன் ஒரு வாரமே
   பொறுக்க மாட்டார் யாருமோ!

( 170)





( 175 )





( 180 )





( 185 )

பாரதி போல்வாள்!

இளவெயில் ஆடி ஒளிவிடு மாந்தளிர் மேனி அவள் மேனி
கிளிப் பேச்செல்லாம் நெல்லிக்குப் பத்தாலைசீனி
சளசளவென்ன மலைவீழ் அருவிக் கூந்தல் அவள் கூந்தல்
இளப்பமில்லை அவ் வழக்குக் களஞ்சியத்தைக்கை ஏந்தல்!
துன்ப ஆடவர் இன்புறும் மாணிக்கச் சிரிப்பே அவள் சிரிப்புக்
கன்னம் பளிங்கெனில் இயற்கை அன்னை கையிருப்பு!
பொன்வெயிலும் வெண்ணிலவும் ஒளிவிடும் அணிகள் இவள்
                                அணிகள்
அன்பு செய்தால் எனை அண்டுமா வையப் பிணிகள்?
பண்டை மறக்குல மாண்பினுக்உரியாள் அவள் உரியாள்
அண்டும் பகையை வெல்லும் மக்களைத் தருவாள்!
மண்டு புகழ்ப் பாரதி தமிழ் போன்ற சொல்லாள்
                                இன்சொல்லாள்
திண்டாடும் எனக்கின்ப வழிகாட்ட வல்லாள்!





( 190 )




( 195 )

அவனும் அவளும்

அவள்; தின்பதற்குத் தேங்குழலே
       தென்றலுக்குப் பூங்குழலே
       அன்பு செய்ய வாய்த்திருக்கும்
       அத்தானே-என்
       ஆசையெல்லாம் உன்மேல் வைத்தேனே!

அவன்; இன்பத்தின் இருப்பிடமே
       என் காதல் வார்ப்படமே
       முன்பிருந்தும் காத்திருக்கும்
       மாதுக்கு-நல்
       முத்துப் பிறக்காததும் ஏதுக்கு?

அவள்; தங்கமலை வெள்ளிமலை
       சந்தத் தமிழ்ப் பொதிகைமலை
       குங்குமத்தில் உன் முகந்தான்
       தெரியாதோ- என்
       கொஞ்சுமொழி உன் காதில் தோயாதா?

அவன்; சங்கத்து முத்தமிழே
       தாவியுண்ணும் புத்தமுதே
       மங்கைக்கும் செங்கைக்கும்
       தூரமா-உன்
       வாய்திறக்க இவ்வளவு நேரமா?

( 200)





( 205 )





( 210 )





( 215 )


வண்டும் வேங்கையும்

காதலன்; கோடைக்குக் குளிர் இருக்கும்
        கூந்தலுக்கு மலர் இருக்கும்
ஒடைக்குப் பக்கம் ஒரு மேடையாம்-அந்த
மேடையிலே இரண்டு காடையாம்.

காதலி; கோடைக்குக் குளிர் இருக்கும்
        கூந்தலுக்கு மலரிருக்கும்
ஒடையின் பக்கம் ஒரு மேடையா-அதில்
கூடுகட்டும் சின்னஞ்சிறு காடையா!

காதலன்; எருமை இறங்கக் கண்டால்
        தவளை தாங்கிடுமா
இருவரும் அங்கே கூடி இருக்கலாம்-நாம்
எந்நேரமும் கொஞ்சிப் பேசிச் சிரிக்கலாம்.

( 220 )





( 225 )





( 230 )

காதலி; தெரிந்தது பதைப்பு
      புரிந்ததே உன் கொழுப்பு
சிரிக்கச் சிரிக்கப் பேசுவது செல்லாது-உன்
சில்லரைப் பேச்சுக்கள் என்னை வெல்லாது.

காதலன்; பேசாதா பச்சைக்கிளி
        சிரிக்காத முல்லைக்கொடி
பேசுவதும் சிரிப்பதுவும் நாளைக்கே-உதட்டில்
பிச்சைபோடு மெத்த பசி வேளைக்கே!

காதலி; ஆசைக்கு நான் ஆளல்ல
        ஆட இது நாளல்ல
மூசு வண்டு வேங்கையிடம் ஒடுமா-ஒரு
முல்லைக்கொடி வேம்படியை நாடுமா?



( 235 )






( 240 )

இன்பம், எங்கும் இன்பம்!

தலைவி;  காற்றி லெல்லாம் இன்பம் அந்தக்
        கடல் முரசில் இன்பம்
        ஆற்று வெள்ளம் ஊற்றுப்புனல்
        அசைவி லெல்லாம் இன்பம்
        நாற்றிசையும் இன்பம் இதொ
        நல்ல நிலாத் தோட்டம்-அதில்
        மாற்றமிலா நம் காதல்
        வாழ்க்கை எலாம் இன்பம் இன்பம்!

தலைவன்; சிரிப்பினிலே இன்பம் உன்றன்
        சேல்விழியில் இன்பம் நீ
        இருக்கும்போதும் நடக்கும் போதும்
        பேசும்போதும் இன்பம்!
        உரித்துவைத்த பழமே உன்
        உடுக்கை போன்ற இடுப்பை-நீ
        திருப்பும் போதும் நொடிக்கும் போதும்
        குலுக்கும் போதும் இன்பம் இன்பம்!


( 245 )




( 250 )





( 255 )

தேனமுதே!

தேனமுதே பாலமுதே
நானுனைப் பெற்றதால்!
போனதுண்டாம் என்னிளமை
நானுனைப் பெற்றதால்! -தேனமுதே பாலமுதே!

மேலானஎன் கட்டுமார்பும்
தோலாய் இளைத்ததாம்
மின்னும்என்றன் உடம்பும் சலவை
நூலாய் வெளுத்ததாம்
ஆனநாளெல் லாம் உனைநான்
தாலாட்டும் பணியாம்
அழகிய பஞ்சணை இல்லையாம்
நானுனைப் பெற்றதால்! -தேனமுதே பாலமுதே!

( 260)





( 265 )




( 270 )

உன் அப்பா என் அத்தான்
உறவும் பொய்தானாம்
உற்ற காதல் வற்றிப்போன
தும் உண்மை தானாம்
புன் சிரிப்பும் கொள்ளாராம்
போனதுவாம் காதலின்பம்
நானுனைப் பெற்றதால்! -தேனமுதே பாலமுதே!

பொன்னல்ல வெள்ளியல்ல
பூவே உன் கன்னம்!
புதுப்புது முத்தம் இந்தாஇந்தா
வாங்கிக்கொள் இன்னம்!
இந்நிலத்தில் என்கண்ணே
பிள்ளை அமுதே!
எல்லாம் பெற் றேனடா
நானுனைப் பெற்றதால்! -தேனமுதே பாலமிதே!



( 275 )





( 280 )




( 285 )